சுவிட்சர்லாந்தின் ஜூரா மாநிலத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு – காவல்துறை எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஜூரா மாநிலம் சமீப வாரங்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மாநிலம் முழுவதும் 24 வீட்டுத் திருட்டு மற்றும் வாகனச் சிதைவுகள் பதிவாகியுள்ளதாக கான்டன் போலீஸ் தெரிவித்துள்ளது.
திருடர்கள் எதையும் விட்டு வைக்காமல் தாக்குகின்றனர் – மடிக்கணினி, பணம், நகைகள், மதுபானங்கள், கட்டுமானப் பொருட்கள், சைக்கிள்கள் என பலவகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. காவல்துறை மக்கள் தங்கள் வீடுகளும் வாகனங்களும் பாதுகாப்பாக இருக்க சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இருட்டு சீசன் தொடங்குவதால், குறிப்பாக குளிர்கால நேரத்திற்கு மாற்றப்படும் இந்தக் காலத்தில், திருட்டுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சூரியன் விரைவாக மறையும் காரணத்தால், வீடுகள் காலியாக இருப்பதை திருடர்கள் எளிதில் கவனிக்க முடிகிறது.

போலீசார் பரிந்துரைப்பது: வீடு விட்டு வெளியேறும் முன் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட எல்லா நுழைவு வழிகளையும் பூட்டுவது, வாகனங்களை எப்போதும் பாதுகாப்பாக நிறுத்துவது, மதிப்புள்ள பொருட்களை வெளிப்படையாக வைக்காமல் இருக்க வேண்டும். நீண்டகாலம் வீட்டில் இல்லாத நேரங்களில், விளக்குகள் அல்லது ரேடியோவை இயக்கிவைத்தல், அயலவர்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்தல் போன்ற சிறிய நடவடிக்கைகளும் திருட்டுகளைத் தடுக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் அல்லது வொய்ஸ் மெசேஜ்களில் தாங்கள் வீட்டில் இல்லையென வெளிப்படுத்த வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் காணப்பட்டால் உடனடியாக 117 என்ற அவசர எணுக்கு தகவல் அளிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூரா மாநில காவல்துறை திருட்டு அதிகம் நடைபெறும் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் வழங்கும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
போலீசார் மாநில மக்களுக்கு “பாதுகாப்பான மற்றும் அமைதியான சரத்காலத்தை” வாழ்த்தியதுடன், அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தினர்.
© Kapo Jura