பாசல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை 5 ஆண்டுகளுக்குள் முடிக்காத மாணவர்களுக்கு அதிக கட்டணம்
சுவிட்சர்லாந்தின் பாசல் (Basel) பல்கலைக்கழகம், Bachelor பட்டப்படிப்பை 5 ஆண்டுகளுக்குள் முடிக்காத மாணவர்கள் எதிர்காலத்தில் செமஸ்டர் கட்டணத்தை இரட்டிப்பாக செலுத்த வேண்டி வரும் புதிய விதியை அறிவித்துள்ளது. இது 2026 முதல் செயல்படுத்தப்படும் என பல்கலைக்கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி படி, பட்டப்படிப்பை 5 ஆண்டுகளில் முடிக்காமல், குறிப்பாக 13வது செமஸ்டரில் செல்லும் மாணவர்கள், அவர்களுக்கு தற்போதைய செமஸ்டர் கட்டணமான 850 சுவிஸ் பிராங்கை விட இரட்டிப்பான 1700 பிராங்கு கட்டணம் வசூலிக்கப்படும். எனினும், இந்த கட்டண உயர்வை தவிர்க்க, மாணவர்கள் பல்கலைக்கழகத்துடன் ஒரு படிப்பை முடிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எழுதி, அதனை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம், 5 ஆண்டுகள் கடந்த மாணவர்களை தனிப்பட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு அழைக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளது. இதில், ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட சூழல் கருத்தில் கொண்டு, அவர்களின் படிப்பை முடிப்பதற்கான வழி வகுப்பும், அதனை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்வதும் இடம்பெறும். ஒப்பந்தப்பட்ட நேரத்திற்கு பிறகு பட்டம் பெறவில்லை என்றால் மட்டுமே இரட்டிப்பான கட்டணம் வசூலிக்கப்படும்.

பட்டப்படிப்புக்கு அடிப்படையாக குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும். இருப்பினும், வேலை செய்வது, குடும்பப் பொறுப்புகள், தேர்வுகளை மீண்டும் எழுதுதல் அல்லது படிப்புகளை மாற்றுதல் போன்ற காரணங்களால், பலர் 5 ஆண்டுகளை கடந்து படிப்பை முடிக்க நேரிடுகின்றது. அதனால், பல்கலைக்கழகம் இந்த விதி மூலம் மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ய உதவ விரும்புகிறது, அதே நேரத்தில் படிப்பை மிகவும் நீடிக்க அனுமதிக்காத விதமாக இது அமையும்.
பாசல் பல்கலைக்கழகம், பெர்ன் பல்கலைக்கழகத்தின் விதிகளை பின்பற்றுகிறது. பெர்னில், 13வது செமஸ்டருக்குப் பிறகு பட்டம் பெறாதவர்கள் கட்டணம் 750 பிராங்கில் இருந்து 1500 பிராங்காக உயர்கிறது. அதே நேரத்தில் கடுமையான சூழ்நிலைகளில் கட்டண உயர்வு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.