சென்ட்காலன் மாகாணத்தில் ஒரே நாளில் பல்வேறு திருட்டுகளால் போலீசார் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில் சென்காலன் கன்டோனில் ஜூன் 20 முதல் 23 ஆம் தேதி வரை, ஒரே நகரத்தில் உள்ள மூன்று பகுதிகளில் பல்வேறு திருட்டு மற்றும் உடைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் தற்போது காவல்துறையில் அதிர்ச்சியையும், பொதுமக்களிடம் பெரும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் சம்பவம்: வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை (23.06.2025), Scheffelstrasse பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் அடையாளம் தெரியாத குழுவினர் புகுந்துள்ளனர். கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்த அறைகளை உடைத்து, சுமார் ஆயிரக்கணக்கான ஃப்ராங்க் மதிப்புள்ள கட்டுமான இயந்திரங்களை திருடிச் சென்றுள்ளனர். இது ஒரு புதிய குடியிருப்புத் திட்டம் என்பதாலேயே பாதுகாப்பு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் கணிசமான சொத்துச் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம்: Hans-Albrecht-Strasse பகுதியில் உள்ள ஒரு இ-சைக்கிள் வாடகை நிறுவனத்தின் களஞ்சிய அறையில் ஞாயிறு மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை (23.06.2025) 12 மின்சார சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளது. களஞ்சிய அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இந்தச் செயலை செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு பல ஆயிரம் ஃப்ராங்க் ஆகும். இதில் ஏற்பட்ட சொத்துச் சேதம் மட்டும் 1,500 ஃப்ராங்க்குகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது சம்பவம்: St.Gallerstrasse மற்றும் Winkelstrasse ஆகிய இரு சாலைகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்களில் சனிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலம் வரை (23.06.2025) மூன்று இடங்களில் நிகழ்ந்துள்ளது.
- St.Gallerstrasse-ல் உள்ள ஒரு உணவகம் மற்றும் முடி அலங்கார நிலையத்தில் ஜன்னல்கள் உடைத்து புகுந்து பொருட்கள் திருடப்பட்டன. இதில் பல நூறு ஃப்ராங்க் மதிப்புள்ள பணம், மற்றும் சுமார் 2,000 ஃப்ராங்க் மதிப்புள்ள சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது.
- Winkelstrasse-யில் உள்ள ஒரு உணவுப் பொருள் கடையில் ஜன்னல் வழியாக புகுந்து மதுபானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் திருடப்பட்டன. இங்கே 500 ஃப்ராங்க் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று சம்பவங்களும் ஒரே வார இறுதியில், நடந்துள்ளன என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்து சாதுர்யமிக்க திருடர்கள் குழு ஒன்று திட்டமிட்டுதான் இச்செயல்களை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்றதும் தெரியவில்லை. ஆனால், சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள், தங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்துக்கிடமான நபர்களை பார்த்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
@Kapo SG