சுவிஸில் விமான டிக்கட் இன்றி விமானத்திற்குள் ஏறுவோர் எண்ணிக்கை உயர்வு
சுவிட்சர்லாந்தில் விமான டிக்கட் இன்றி விமானத்திற்குள் ஏறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூரிச் விமான நிலையத்தில் விமானச்சீட்டு மற்றும் போர்டிங் பாஸ் சரிபார்ப்பு நிலையங்களை தவிர்த்து விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதிகளில் சீட்டு இல்லாமலே நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2024 ஜூன் மாதம், சூரிச் விமான நிலையத்தில் ஒரு பெண், போர்டிங் பாஸ் இல்லாமலே அம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்தில் ஏற முடிந்துள்ளது.
போர்டிங் பாஸ் சரிபார்ப்பு அதிகாரி திரும்பிப் பார்த்த தருணத்தில், வேகமாக நடந்து செல்லும் மூலமாக குறித்த பெண் தப்பித்து சென்றார். அதேபோல, கேட் பகுதியில் உள்ள இறுதி சரிபார்ப்பையும் தவிர்த்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (FOCA) அவருக்கு 500 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதித்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு கூட, அந்த பெண் மீண்டும் சில வாரங்களில் விமான டிக்கட் மற்றும் போர்டிங் பாஸ் இன்றி பயணம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இந்த முறை பார்சிலோனாவுக்கு தனது நண்பர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறினார். சரியான போர்டிங் பாஸ் கொண்ட பயணியின் பின் நின்று, அவருடன் சேர்ந்து பாதுகாப்பு பகுதியை கடந்துவிட்டார்.

அதேபோல், ஒரு மதுபானம் அருந்திய ஆண் பயணி, “இது ரயிலில் பயணிப்பது போல் எளிமையானதா?” என சோதிக்க விரும்பி, இதே முறையை பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
“இப்போது நவீன சென்சார், கேமரா மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் உள்ளதால், இந்த மாதிரியான தடையற்ற நுழைவுகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவதாக சூரிச் விமான நிலைய ஊடகப் பேச்சாளர் பெட்டினா குன்ச் குறிப்பிட்டுள்ளார்.
விமான டிக்கட் இன்றி பயணித்தல் மற்றும் விமான போர்டிங் பாஸ் இன்றி பயணித்தல் தொடர்பில் 2023 – 1வழக்கு, 2024 – 4 வழக்குகள் மற்றும் 2025 (மே மாதம் வரை) – 4 வழக்குகள் என பதிவாகியுள்ளது.
இவை எல்லாம் சூரிச் விமான நிலையத்தில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. போர்டிங் பாஸ் சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு சரிபார்ப்பு இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அதிகாரிகள் விளக்குகின்றனர்.
விமானப் பயணச் சீட்டு மற்றும் போர்டிங் பாஸ் போன்ற ஆவணஙக்ள் இன்றி விமானத்திற்குள் ஏறுவதற்கான சந்தர்ப்பம் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.