எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 26 ம் திகதி சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் ‘சுவிஸ் தமிழ் ஊடக மையம்’ அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.
தாயகத்தில் இருந்து யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், இறுதியுத்தம் இடம்பெற்று முடிந்த பின்னரும் பல்வேறு காரணங்களால் ஏராளமான ஊடகவியளாளர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு இடம்பெயர்தனர்.
அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் சுவிஸ்நாட்டிலும் பல ஊடகவியளாளர்கள் இன்றும் தங்களது பணியை மேற்கொண்டுவருகின்றனர். எனவே அவர்களுக்கான கௌரவம் மற்றும் சரியான களம் என்பன இல்லாமல் இருந்துவந்துள்ளது.
சுவிஸ் தமிழ் ஊடக மையம்
எனவே அவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வாகவும், ஊடகவியளாளர்களை ஒரு குடையின் கீழ் இணைத்து சுவிட்சர்லாந்து அரசின் அனுமதியோடு அவர்களின் பணியை மேற்கொள்ள ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக சுவிஸ் தமிழ் ஊடக மையம் நிறுவப்பட்டுள்ளது.
இவ் அமைப்பின் ஆரம்ப நிகழ்வுக்கு ஊடகத்துறை சார்ந்தோர், ஈடுபாடு உள்ளோர், கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளோர், ஊடகத்துறையில் பங்களிப்புச் செலுத்த விரும்புவோர். பொது அமைப்புக்களைச் சார்ந்தோர், பொதுமக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் நிர்வாக குழுவினர்.
சுவிற்சர்லாந்தின் தமிழ் ஊடகத் துறையினரை ஒருங்கிணைத்தல், இரு மொழிச் சூழலில் தாயக வாழ்விட செய்திகளின் பாலமாக இருத்தல், ஊடகத்துறையில் ஈடுபாடு உடையோருக்கு அது சார்ந்த சுவிஸ் அரச அங்கீகாரம் பெற்ற கற்கைகளுக்கான பரிந்துரையும் பயிற்சிகளும் வழங்கல், நீண்ட அனுபவம் மிக்க ஊடகத்துறைசார் வல்லுனர்களூடான பயிற்சிப்பட்டறைகள், ஊடகத்துறை சார்ந்த இன்னும் பல விடயங்களை செயற்படுத்துதல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் ஊடகமையத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.