சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெற்றியாரம் 2024 நிகழ்வின் ஒரு பார்வை சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகத்தினால் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த மதிப்பளிப்பின் வெற்றியாரம் 2024 நிகழ்வு 05/06/2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றது.
பேர்ன் மாநிலத்தின் வேல்ப் நகரில் குறித்த நிகழ்வு ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகத்தின் தலைவர் செ.வைகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த வெற்றியாரம் நிகழ்வில், பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதோடு கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

யோகாசன திறனாற்றுகை நிகழ்வு, பரதநாட்டிய நிகழ்வுகள், சிலம்பாட்டம், கராத்தே, மேடைநாடகம், இசைநிகழ்வுகள், நினைவுப்பேருரை, கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் என்பன இடம்பெற்றிருந்தன.

மேலும் அண்மையில் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இரண்டாம் இடத்தை பெற்று பெருமை தேடித்தந்த சுவிட்சர்லாந்து உதைபந்தாட்ட வீராங்கணைகளுக்காகவும் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
குறித்த வீராங்கணைகள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளர்களுக்காக விருதுகள் ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகத்தின் தலைவர் திரு:வைகுந்தன் அவர்களினால் பலத்த கரசோசத்தின் மத்தியில் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வெற்றியாரம் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வல்லாட்டம் என்கின்ற நிகழ்வு இடம்பெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்காகவும் மேடையில் கௌரவிப்பு வழங்கப்பட்டது. வேறு எந்த நிகழ்விலும் இல்லாத ஒரு விடயமாக இது பார்க்கப்படுகிறது.

அது மாத்திரமின்றி புலம்பெயர்தமிழர்களின் இயந்திர வாழ்க்கையை பிரதிபலிக்கும் முகமாக ‘பாவைக்கூத்து’ என்கின்ற குறும்நாடகம் ஒன்று மச்சேந்திர குமாரி அவர்களினால் அரங்கேற்றப்பட்டிருந்தது. குறுகிய நேரத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பால் புலம்பெயர் வாழ்க்கையின் வேதனைகளை அனைவரின் கண்முன் நிறுத்தி சென்றது பாவைக்கூத்து நாடகம்.

மேலும் 5000 வருடங்கள் பழைமையான சிலம்பாட்டம் கலையை அழியாமல் சுவிட்சர்லாந்து மண்ணில் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கும் உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனம் கௌரிதாசன் விபுலானந்தன் ஒருங்கமைப்பில் இளைஞர்கள் யுவதிகளின் சிலம்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
திரு கௌரிதாசன் விபுலானந்தனின் வழிநடத்தலில் அவருடைய மகனின் சிறப்பான பயிற்றுவிப்பில் மாணவர்களின் ஆட்டம் வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தது. அத்துடன் கராத்தே ஆட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமதி வாணிசர்மா அவர்களது நாட்டியப்பள்ளியின் மாணவர்களின் பரதநாட்டியமும் மேடையை அலங்கரித்து சென்றது. கௌரவிப்பு நிகழ்வில் பல்துறைகளில் பிரசித்திபெற்றவர்களும் சிறந்த ஆளுமையாளர்கள் உட்பட பலர் கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த ஆளுமையாளர்களாக கீழ்குறிப்பிடப்படும் ஆளுமையாளர்களும் மதிப்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
விக்கி நவரெட்ணம் (இலக்கியத்துறை)
கந்தையா அருந்தவராஜா (இலக்கியத்துறை)
கந்தசாமி விநாயகமூர்த்தி (வர்த்தகத்துறை)
இராமச்சந்திரன் கிசோர் (வர்த்தகத்துறை)
திருமதி நிருபா குருபரன் (சுகாதாரத்துறை)
முல்லை சசி (கலைத்துறை)
பாலேந்திரா ஜெயக்குமார் (விளையாட்டுத்துறை)
கிருஸ்ணசாமி குகதாசன் (நீண்ட தூர துவிச்சக்கரவண்டி ஓட்டவீரர்)
சேபியர் வின்சன்ட் யூட்( கிரிக்கட்)
சுவாம்பிள்ளை மன்மதன் (கராத்தே தற்காப்புக்கலை)
சுபபதி யோகச்சந்திரன் (துவிச்சக்க வண்டி ஓட்டவீரர்).
செல்வி இசானா கண்ணதாசன் (விளையாட்டுத்துறை)
“ஆகியோர்களுக்கு ஆளுமையாளரக்களுக்கான விருதுகள் திரு வைகுந்தன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் தீபிகா கிருஷ்ணதாசன் மனித உரிமைகளுக்கான சிறப்பு விருதினைப்பெற்றிருந்தார். பாடல் திறமைக்கான சிறப்பு விருதினை கரோலின் அவர்கள் பெற்றிருந்தார்.

மேலும் வெற்றியாரம் நிகழ்வில் இன்றும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், மேலும் பல்வேறு ஆளுமையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வுகளுக்கான ஒலி அமைப்பு புதியவார்புகள் இசைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொகுப்பு ஜெனோகரன் ஜெனார்த்தனால் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
-தேவா மதன்-