சுவிட்சர்லாந்திற்கு எதிராக ஐ.நா-வில் வழக்கு தொடர்ந்த 11 வயது சிறுமி.!!!
சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனைச் சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்ப்பல்வகைமை biodiversity முன்முயற்சியில் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகள் கமிட்டிக்கு முறைப்பாடு செய்துள்ளார். 2024 செப்டம்பரில் நடைபெற்ற இந்த முன்முயற்சி வாக்கெடுப்பில், 63 சதவீதமானோர் எதிராக வாக்களித்ததன் மூலம், திட்டம் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், “பாரம்பரிய இயற்கை வளங்கள் மற்றும் உயிர்பல்வகைமையுடைய உயிரினங்கள் நேரடியாக தன் எதிர்காலத்துடன் தொடர்புடையவை” என்பதால், தனக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று இந்த சிறுமி வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு முதலில் சூரிச் கான்டன் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர், சுவிட்சர்லாந்தின் உச்சநீதிமன்றமும் வழக்கை திட்டவட்டமாக தள்ளுபடி செய்தது. மேலும், இதுபோன்ற வழக்குகள் எதிர்காலத்தில் எதுவும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
வழக்கை தொடர்ந்து முன்நிறுத்திய சிறுமி மற்றும் அவரது தாயார், தற்போது ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைகள் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.

UNICEF இணையதளத்தின் விளக்கப்படி, அந்த ஒப்பந்தம், ஒவ்வொரு குழந்தைக்கும் “வளர்ந்து வளர்ச்சி பெறுவதற்கும், தங்கள் கருத்துகள் கேட்கப்படுவதற்கும் உரிமை வழங்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், “சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பல்வகைமை தொடர்பான தீர்வுகளில் குழந்தைகளின் எண்ணங்கள் முக்கியம்” என அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த வழக்கில் வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏனெனில், இதை ஏற்க ஐக்கிய நாடுகள் குழு தயாராக இருந்தால், உலகின் பல நாடுகளில் நடைமுறையிலுள்ள வாக்குரிமை சட்டங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகிவிடும் என சூரிச் பல்கலைக்கழக சர்வதேச சட்ட பேராசிரியர் ஹெலன் கெல்லர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், குழந்தைகள் வாக்களிப்பில் பங்கேற்பதற்கான உரிமை மீதான ஒப்புதல் அழுத்தமாகவும் பரவலாகவும் கல்விச் சூழலில் வளர்ந்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே நேரத்தில், பல வாக்குவாய்ப்பு நிபுணர்கள், பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இளைய தலைமுறையின் கருத்துகள் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
@tamilnews