சாலைப் பணிகளில் கூடுதல் கட்டுப்பாட்டை அமுல்படுத்த ஜெனீவா தீர்மானம்
ஜெனிவாவில், சாலை வேலைகளால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அவசர சேவைப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களில் அதிகமாக நடந்த சாலை வேலைப்பாடுகள் மற்றும் போக்குவரத்து தடைகள், வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
இதன் பின்னணியில், ஜெனிவா மாநில அரசு, சாலை வேலைகளுக்கான திட்டங்களை முறையாக ஒருங்கிணைக்க புதிய அலுவலகம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இது, சாலை வேலைகளை குறைந்த நேரத்திலேயே முடிக்கவும், அவசர சேவைகள் (மருத்துவம், தீயணைப்பு, காவல்துறை) தாமதமின்றி சென்று சேரும் வழியை உறுதி செய்யவும் உதவும்.
மேலும், சாலை வேலைகளால் சிறிய வணிகஸ்தர்கள் கடும் வர்த்தக இழப்புகளை சந்தித்து வருகிறார்கள் என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்வாக, சில வேலைகளை தற்காலிகமாக நீட்டித்து வேறு காலத்துக்குத் தள்ளி வைத்துள்ளதாக மாநிலம் தெரிவித்துள்ளது.

மாநிலம் தற்போது பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமானது – “திடீர் நடவடிக்கை” (Sudden Action) எனப்படும் திட்டம். இது, ஒரு பகுதியிலேயே பெரிய அளவில் சாலையை மூடிவிட்டு, வேலைகளை துரிதமாக முடிக்க உதவும். இதன் மூலம் நீண்ட நாட்கள் போக்குவரத்து தடையை தவிர்க்க முடியும் என கருதப்படுகிறது.
இதற்காக, இரவிலும் வேலைகளை மேற்கொள்ளும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அரசு கூறுவது போல, பேச்சுவார்த்தைகள் நன்கு நடைபெற்று வந்துள்ளன மற்றும் இரவு நேர வேலைகள் விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம், ஜெனிவாவில் சாலை வேலைகள் மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுவதாகவும், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அவசர சேவைகளின் தேவைகள் சமநிலையுடன் பூர்த்தி செய்யப்படும் என மாநிலம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
@WRS