‘சல்லியர்கள்’ திரைப்படச் சிறப்புக் காட்சி நேற்று 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை சூறிச்சில் ‘அரேனா’ (ARENA cinemas) திரைப்பட வளாகத்தில், சல்லியர்களின் திரைப்படப் பயணத்தின் முதற் காட்சியாக திரையேறியது. அரங்கு நிறைந்த மக்கள். சிறப்புக் காட்சி என்பதனாலோ பலருக்கு ஓரிருநாளுக்கு முன்னர் தான் இந்த திரையிடல் பற்றிய தகவல் தெரிய வந்திருக்கிறது என்று பலர் கூறினார்கள்.
‘இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த அறிவித்தல் கிடைத்திருந்தால் ‘ஹவுஸ்புல்’ காட்சியாக இருந்திருக்கும்’, பார்த்த மக்களின் ஆதங்கம். ‘மிகக் குறுகிய கால விளம்பரம். 100 பேர் வந்தால் வெற்றி. 160 இருக்கைகள். 149 பேர் வந்திருந்தார்கள். சுவிஸ்வாழ் தமிழ் மக்களின் தமிழுணர்வு கண்டு பெருமிதமடைகிறேன்’ என்றார், கலந்து சிறப்பிப்பதற்காக வந்த இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் அவர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மருத்துவப் போராளிகளின் பங்கு பற்றிய தகவல்கள் வெளியுலகிற்கு பெரிதாக வரவில்லை. சல்லியர்கள் திரைப்படம் அதனை நிவர்த்தி செய்கிறது. சல்லியர்கள் திரைப்படம் தமிழீழத்தில் இடம்பெற்ற போரின்போது, மருத்துவப் போராளிகளின் போராட்ட வாழ்வையும் அவர்களது ஈகத்தையும் எடுத்தியம்பிய திரைப்படம். மருத்துவ போராளி தூயவன் எழுதிய புத்தகக் குறிப்பில் இருந்தும் மற்றைய போராளிகளின் போராட்ட அனுபவங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட உண்மை சம்பவங்களைக் கோர்வையாக்கி, அதனைக் கதையாக்கி, பின்னர் திரைக்கதையாக்கி, நெறிப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் நேரடியாக தமிழீழம், புலிகள், சிறீலங்கா என்று குறிப்பிடாது, குறியீட்டு வடிவத்தில், பொருள்விளக்கும் நெருங்கிய சொலாடல்களுடன் திரைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் இயக்கம் தி. கிட்டு. இவரது முதல் இயக்கம் ‘மேதகு 1’. நெறியாளுமையின் துல்லியம் அதில் காட்டப்பட்டிருக்கிறது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்பரிமாணமுள்ள தமிழ் உணர்வாளர் சேது கருணாஸ் அவர்களின் தாயாரிப்பிலும் நடிப்பிலும் சல்லியர்கள் கரு, உரு பெற்று திரைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியத் தமிழ்ச் சினிமா மொழியிலும் இந்தியத் தணிக்கைக் குழுவின் வரம்புகளுக்குட்பட்டும் மிகைப்படுத்தலின்றி மிக நேர்த்தியாக ஒரு மருத்துவப் பெண் போராளியின் கதையாக திரைப்படம் பயணிக்கிறது. மனித வாழ்வின் காதல், அன்பு, பாசம், கவலை, எழுச்சி, தியகம், போன்ற அனைத்து உணர்வுகளும் மிக் கட்டுப்பாடகக் கலக்கப்பட்டிருக்கிறது. இக் கதையின் நாயகி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாத்திரமாக வாழ்திருக்கிறார். அனைத்துப் பாத்திரங்களும் தம்தம் பங்கை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று தமிழர் விடுதலைப் போராட்டமாக உள்வாங்கப்பட்டு, உலகத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் தமது அடையாளமாகவும் அதன் அங்கமாகவும் தம்மை அடையாளப் படுத்துகிறார்கள். போரின் ரணங்கள் மறக்கப்பட்டு 15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நினைவூட்டும் நிகழ்வுகளாக காட்சிகள் விரிகின்றன. அடிவயிறும் கலங்கியது. பேசாது பேசப்படும் உணர்வாகத் தலைவர் வருகிறார். தமிழீழ விடுதலைப் போராட்ட சில நிகழ்வுகளை அவ்வப்போது தமிழ்நாட்டு சினிமா உள்வாங்கியதுண்டு.
எதிர்மறையாக இந்திய முழநீள சினிமாவும் வந்ததுண்டு. இன்று முதல் முறையாக ஒரு மருத்துவப் போராளிகளின் போராட்ட வாழ்வை முழநீளத் திரைப்படமாக தமிழ் உணர்வாளர் சேது கருணாஸ் அவர்கள் தயாரித்து வெளியிட்டு வருகிறார். அவரது கரங்கள் பலப்படுத்தப்பட்டால் மேலும் பல படங்கள் உருவாகும்.
‘சல்லியர்கள்’ திரைப்படச் சிறப்புக் காட்சிகள் நேர்வே, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மேலும் பல நாடுகளில் திரையிடப்பட இருக்கிறது. 2025 ஜனவரி முதல் உலக தமிழர்கள் அனைவரும் பார்க்க ‘சல்லியர்கள்’ வருகிறார்கள்! வரவேற்றுக் கொள்வோம்!
தமிழால் ஒன்றுபடுவோம். தமிழராய் நிமிர்வோம்.
THANKYOU :- பொன்ராசா அன்ரன் 18.11.2024