சர்ச்சைக்குரிய உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரத்தை உருவாக்கிய நபர் மரணம்
சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என ஒரு இயந்திரம் விளம்பரப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியது. அதற்கு சார்க்கோ (Sarco) என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், சார்க்கோ இயந்திரத்தை உருவாக்கிய The Last Resort என்னும் நிறுவனத்தின் துணைத்தலைவரான Florian Willet என்பவர், மே மாதம் 5ஆம் திகதி, ஜேர்மனியில் மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் சார்க்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

அந்தப் பெண் உயிரிழக்கும்போது, The Last Resort நிறுவனத்தின் துணைத்தலைவரான Willet மட்டுமே அவருடன் இருந்தார்.
அந்தப் பெண் சார்க்கோ இயந்திரம் மூலம் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக அதனுள் படுத்து பொத்தானை அழுத்தியபோது, அவரது உயிர் அமைதியாக பிரியவில்லை என்றும், ஆகவே, அந்தப் பெண்ணுடனிருந்த Willet அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
Willetஐ சுவிஸ் பொலிசார் கைது செய்து 70 நாட்கள் காவலில் அடைத்தார்கள். ஆனால், அவர் மீதான சந்தேகம் உறுதி செய்யப்படாததால் 2024ஆம் ஆண்டு Willet காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், The Last Resort நிறுவனத்தின் இணையதளத்தில், நேற்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி, Willet இன் மரண அறிவித்தல் வெளியாகியுள்ளது.