சப்ஹவுசன் மாநிலத்தில் தொடரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் சப்ஹவுசன் மாநிலத்தில், கடந்த வாரம் மட்டும் “போலி போலீசாரிடமிருந்து” பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அங்குள்ள மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறுவதால், அவர்களை விழிப்புணர்வூட்ட வேண்டும் என்றும், இந்தப் பதற்றமூட்டும் மோசடி முறையைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்காரர்கள் தற்போது “போலி போலீசார்” என தங்களை அறிமுகம் செய்து, மக்களை ஏமாற்ற பல வகையான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். கடந்த ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில், சப்ஹவுசன் மாநிலத்தில் இத்தகைய ஏமாற்று அழைப்புகள் பல இடம்பெற்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வழக்குகளில், உயர் ஜெர்மன் மொழியில் பேசும் ஒரு பெண் போலீசாராக நடித்து, ஒரு கொள்ளை வழக்கில் சந்தேகப்படுகின்ற நபரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தில், அழைக்கப்படும் நபரின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதனால், அந்த நபரின் பணம் மற்றும் மதிப்புள்ள சொத்துகள் ஆபத்தில் உள்ளதாகவும், “போலீசாரே” அதை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது அவசியம் எனவும் கூறுகிறார்கள்.

போலீசாரின் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகள்:
இவ்வாறான போலி தொலைபேசி அழைப்பு மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர். இவை பின்வருமாறு அமைந்திருக்கின்றன.
- எந்த ஒரு அறிமுகமில்லாத நபர் உங்களை அழைத்து, திடீரென குடும்பத்தில் விபத்து அல்லது வன்முறை சம்பவம் நடந்தது என கூறி, பணம் கேட்பதை நம்ப வேண்டாம்.
- அவர்களின் தகவல்களின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கவும். நேரடியாக உங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு உண்மைதான் என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- மூத்த குடிமக்களுடன் இந்த Shock Call எனப்படும் அதிர்ச்சி அழைப்பு மோசடி பற்றிப் பேசுங்கள்.
- சந்தேகமிருந்தால், தயங்காமல் சப்ஹவுசன் போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள்.
- போலீசார் ஒருபோதும் தொலைபேசியில் பணம் கேட்கமாட்டார்கள். இது முற்றிலும் போலி செயல் என்பதை புரிந்துகொள்ளுங்கள்..
சப்ஹவுசன் மாநிலத்தில் அதிகரித்து வரும் இந்த மோசடியைத் தடுக்க, மக்கள் தங்களது விழிப்புணர்வை அதிகரிக்கவும், மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும் போலீசார் வலியுறுத்தி கேட்டுள்ளனர்.
@Kapo SH