தாயகத்து எழுத்தாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் எழுதி, ஜீவநதி (இலங்கை) பதிப்பகம் வெளியிட்ட «காலம் வனைந்த கலயங்கள்» என்ற புதிய நூலின் அறிமுக விழா, 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு, பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் மேல் மண்டபத்தில் அமைந்துள்ள தமிழர் களறி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
“தமிழர்களறியால் ஒன்றாகக் கொண்டாடுவோம்! வாருங்கள்!” என அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில், இளையோர் மற்றும் தமிழ் வாசிப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றல் நிகழ்வின் தொடக்கமாக நடந்தது. இதில் திருநிறை. ஆதிலட்சுமி சிவகுமார், சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், திருநிறை. நந்தினி முருகவேள், திருநிறை. பொன்னம்பலம் முருகவேள், திருநிறை. பிரியா மூர்த்தி, திருநிறை. சிவதர்சினி, திருநிறை. பிறேமினி அற்புதராசா, செல்வி லாண்வண்யா இலக்ஸ்மணன், செல்வி சாகித்தியா திருச்செல்வம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைத்தனர்.

விளக்கேற்றலை அடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழர் களறியின் சார்பில் திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்நூலின் அறிமுகம், வழமையான நூல்வெளியீட்டு முறைமையைத் தாண்டி இளையோரிடையே ஒரு வாசிப்பு அனுபவமாக கையளிக்கப்பட்டது. இளந்தமிழ் செல்வங்கள், நூலை வாசித்து அதிலிருந்து வியந்த பக்கங்களைத் தமது குரலில் வாசித்தும் அதன் உட்பொருளை தமிழிலும் டொச்சிலும் விளக்கியும் சிறப்பாகக் கையாண்டனர்.
திரு. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் ஞானலிங்கேச்சுரர் திருக்கோயிலின் சார்பாக வாழ்த்துரை மற்றும் நல்லாசி உரையினை வழங்கினார். ஈழத்தில் வாழ்ந்த வாழ்வியலை வரலாற்றோடு இணைத்து பதிவு செய்யும் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் இப்படைப்பு இளந்தமிழ் வாசகர்களை சென்றடைந்திருப்பது அவருடைய எழுத்துப் பணிக்கு ஓர் அழகான வெற்றியாகும். அவர் தொடர்ந்து காலத்தின் குரலாக எழுத வேண்டும் எனவும் எழுத்து ஊடாக வரலாற்றை தொடர்ந்துப் பதிவு செய்ய வேண்டுமெனவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்வரும் கதைகளை இளந்தமிழ் வாசகர்கள் வாசித்து வழங்கினர்:
பெண்ணறிவு – செல்வி. அஷ்மிதா திவாகரன்
மெய்ப்பொருள் கண்டறிதல் – செல்வன். முருகவேள் அம்பலன்
மணவிலக்கும் தமிழ்ப்பெண்களும் – செல்வி. அருளினி முருகவேள்
தமிழ்ப்பெண்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் – செல்வி. சசிகுமார் சம்யுக்தா, செல்வி. மிருணாளினி மஞ்சுதன்
வரலாறு உருவாக்கிய வழிகாட்டி – செல்வி. அபிராமி சுரேஸ்குமார், செல்வி. அமிர்தவர்ஷினி சுரேஸ்குமார், செல்வி. மகிழினி சிவகீர்த்தி
இவர்கள் ஒவ்வொருவரும் நூலில் தங்களை கவர்ந்த பக்கங்களை தமிழிலும், அதன் உட்பொருளை ஜெர்மானியிலும் தெளிவாக எடுத்துரைத்தனர். இது ஒரு வாசிப்பு அனுபவத்தையே ஒரு மெய் நிகழ்வாக மாற்றியது.
வருகை தருகைதந்திருந்த அனைவருக்கும் நூலாசிரியரிடமும் மற்றும் வாசித்த இளையோர்களிடம் கேள்விகள் கேட்பதற்கும் கருத்து பகிர்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
வாசிப்பு மாலை, புத்துணர்ச்சியூட்டும் வாசிப்பையும் ஆழமான உரையாடல்களையும் ஏற்படுத்தியது. நூலாசிரியரிடம் இருந்து நேரடியாக கையொப்பமிட்டுப் பெற்றுத் தங்கள் நினைவுப்பலகையில் பதிவு செய்தனர். நூலாசிரியர் திருமதி. ஆதலட்சுமி சிவகுமார் அனைவருக்கும் நன்றி நவின்றார். தனது எழுத்து இளைய தமிழ்ச் சமூகத்தை எட்ட வேண்டும் தனது எண்ணம் ஈடேறியதையிட்டு மகிழ்ந்து இளைவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியினையும் பகர்ந்தார்.
இந்நிகழ்வு இரவு உணவுடன் 18.15 மணிக்கு நிறைவுற்றது. தொடர்ந்து 19.45 மணி வரை, வருகையளித்தவர்கள் உணவுடன் நூல் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்தனர்.
பங்கெடுத்த இளையவர்கள் தாம் தொடர்ந்தும் தமிழ் நூல்கள் வாசிப்போம் எனும் உறுதியினையும் தெரிவித்திருந்தனர். மகிழ்ச்சியூட்டும் வாசிப்பு பட்டறிவையும் (அனுபவத்தை) தமிழ் இலக்கியத்தின் எதிர்காலத்தை உணர்த்திய நிகழ்வுமாக இந்நூல் அறிமுக விழா சிறப்பாக நிறைவடைந்தது.
நன்றி :- இருப்பு