கனடாவில் ஏற்பட்டுள்ள பெரும் காட்டுத்தீ காரணமாக உருவான புகை, தற்போது ஐரோப்பாவையும் பாதித்துள்ளது. இந்த காட்டுத் தீ காரணமாக சுவிட்சர்லாந்தின் அழகிய பனிமலையிலும் தூய்மையான காற்று கிடைக்கப் பெறாத நிலை உருவாகியுள்ளது.
பெர்னீஸ் ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள யுங்க்ஃப்ராவ்யோக் மலைச்சிகரத்தில், காற்றில் உள்ள தூசி/துகள்கள் (Particulate Matter) அளவு சற்று அதிகரித்து, ஒரு கன மீட்டருக்குள் 57 மைக்ரோகிராம்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட உயர்ந்ததாகவும், Meteonews Switzerland திங்கள் அன்று X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் அறிவித்தது. அதேபோல், மெட்டியோஸ்விஸ் (MeteoSwiss) எனும் அரசு வானிலை ஆய்வுமையம், செயற்கைக்கோள் படங்களில் கூட, இந்த புகை மற்றும் தூசி அதிகரிப்பு தெளிவாக காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

உரியின் Gemsstock மலைப்பகுதியில், காட்சித் திறன் குறைவடையும் அளவுக்கு புகை படிவு காணப்பட்டுள்ளது. இந்த புகை, கனடாவில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான காட்டுத்தீ சம்பவங்களால் உருவானது.
கனடா தேசிய காட்டுத் தீ அறிக்கையின் படி, மிகுந்த வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாக தீயின் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. மே மாத இறுதிக்குள் 17,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஸ்விட்சர்லாந்தில் காட்சித்திறனும், காற்று நலனும் பாதிக்கப்படுவதால், மலைப்பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமங்கள், வெளிப்புற செயற்பாடுகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.