இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் : நாடுவானில் வைத்து திருப்பியனுப்பப்பட்ட சுவிஸ் விமானம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட இராணுவ மோதல் காரணமாக, சிங்கப்பூருக்குச் சென்ற Swiss International Air Lines நிறுவனத்தின் விமானம் தனது பயணத்தை பாதியில் நிறுத்தி, சுவிட்சர்லாந்துக்கு திரும்பியது. குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் பாதுகாப்புடன் சுவிட்சர்லாந்துக்கு மீண்டும் வந்தனர்
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் நடந்ததாக Swiss நிறுவன பேச்சாளர் தெரிவித்தார். அந்த விமானம் சிறிது நேரம் ஈரானின் வான்வழியில் பறந்தபின்னர், அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு சூழ்நிலைக்கேற்ப, ஈரான் விமான போக்குவரத்து அதிகாரிகள் விமானத்தை வான்வழியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டனர். ஏனெனில் ஈரானின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

விமானத்தினை இயக்கிய குழு, நிலைமை மிக அதிக ரிஸ்க் கொண்டதாக கருதி, பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நடவடிக்கையாக, அசர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் வான்வழியாக திரும்பச் சென்று சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பாக இறங்கியது.
இவ்வாறான சிக்கலான சூழ்நிலையில் விமானம் பாதுகாப்பாக இயக்கப்பட்டதை Swiss நிறுவனம் உறுதிப்படுத்தியது. விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலை, மேற்கு ஆசியா பகுதியில் நிலவும் நிலைமை காரணமாக, பல்வேறு சர்வதேச விமானங்கள் தங்களுடைய வழித்தடங்களை மாற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளளமை குறிப்பிடத்தக்கது.