கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து: நான்கு உயிரிழந்தவர்களின் அடையாளம் உறுதி
புத்தாண்டு இரவில் வலைஸ் கன்டோனில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா நகரில், ‘லெ கான்ஸ்டெலேஷன்’ என்ற பாரில் ஏற்பட்ட தீ விபத்துடன் தொடர்பாக, வலைஸ் கன்டோனல் போலீசார் நான்கு உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதி செய்து, அவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த சில மணி நேரங்களாக வலைஸ் கன்டோனல் போலீசார், பேரழிவு பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணும் பிரிவு (DVI) மற்றும் சட்ட மருத்துவ நிறுவனம் இணைந்து மேற்கொண்ட விரிவான அடையாளம் காணும் பணியின் மூலம், தற்போது வரை இரண்டு சுவிஸ் பெண்கள் மற்றும் இரண்டு சுவிஸ் ஆண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்களின் வயது 21 மற்றும் 16 ஆகவும், ஆண்களின் வயது 18 மற்றும் 16 ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்ததன் பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பங்களுக்கு மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய விசாரணைகளும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்கும் போதும், வலைஸ் கன்டோனல் போலீசார் அவற்றை உடனுக்குடன் வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை மதித்து, தற்போதைய நிலையில் மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வலைஸ் கன்டோனல் போலீசார் (Kantonspolizei Wallis) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
© Kapo VS