க்ரான்ஸ்-மொன்டானா தீ விபத்து – 40 பேர் பலி, 110 க்கும் மேற்பட்டோர் காயம்.!!
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் உள்ள Crans-Montana நகரில் புத்தாண்டு இரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் Sion நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.
கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் முழுமையான அடையாள உறுதிப்படுத்தல் பல நாட்கள் ஆகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட இளைஞர்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில், சுவிஸ் கூட்டாட்சி தலைவர் Guy Parmelin வலைஸ் பகுதிக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். “பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் குறித்து இன்னும் எந்த தகவலும் அறிய முடியாமல் தவிக்கிறார்கள்” என அவர் கூறினார்.
காயமடைந்த சிலர் Lausanne University Hospital உட்பட சூரிச், பெர்ன் மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாளம் காணும் பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கன்டோன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 0848 112 117 என்ற உதவி தொலைபேசி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.