
சுவிட்சர்லாந்தில் பயணிகளுக்கும் விமான நிலையப் பணியாளர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து விமான நிலையப் பணியாளர்கள் மீது பயணிகள் தாக்குதல் நடாத்துதல், தூற்றுதல், வாய்த்தர்க்கம் செய்தல் உள்ளிட்ட சம்பவங்களின் எண்ணிக்கைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் விமான நிலையங்களில் அமுல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் பயணிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இதனால் விமானப் பயணிகள் அதிருப்திக்கு உள்ளாவதாகவும், கோபாவேசமாக செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவிஸ் விமான நிலையங்களில் பயணிகள், பணியாளர்களை தூற்றுதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் வழமையான விடயமாக மாற்றமடைந்துள்ளது.
சூரிச் விமான நிலையத்தில் இவ்வாறான ஓர் சம்பவமொன்று நாள் ஒன்றில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை தொடர்பான சிக்கல் நிலை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாது என அதிகாரிகளினால் கூறப்பட்ட பயணியொருவர் வன்முறையாக நடந்து கொண்டுள்ளார்.
விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் பயணிகள் வன்முறை வழிகளைப் பயன்படுத்தி விமானத்தில் பயணிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்தாலும், நோய்த் தொற்றின் பின்னர் இந்த சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்துவிடும் பயணிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவிக்கின்றது.
Source:- TamilSwiss