சுவிற்சர்லாந்தில் மூன்று மாநில தமிழ்ப்பள்ளிகள் இணைந்து நடாத்திய பொங்கல் விழா
சுவிற்சர்லாந்து நாட்டின் செங்காளன், துர்க்காவ், அப்பென்செல் ஆகிய மாநில தமிழ்ப்பள்ளி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 01.02.2025 சனிக்கிழமை அன்று செங்காளன் றொசாக்கில் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பொங்கல் நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து வருகைதந்த விருந்தினர்கள் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்க் கல்விச்சேவை பிரதி நிதிகள், பழைய மாணவர்கள் என அனைவரும் இணைந்து மங்கள விளக்கு, பொதுச் சுடரினை ஏற்றி அரங்க நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தனர்..
இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக துர்க்காவ் மாநிலங்கள் அவையின் பிரதிநிதி திரு.கெனி அவர்கள் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கியிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்க்கல்விச் சேவையின் செங்காளன், றொசாக், சர்க்கான்ஸ், வீல், அப்பென்செல், பிறவன்பெல்ட், வைன்வெல்டன், ஆர்போன், குறொய்ட்ஸ்லிங்கன் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களும் பழைய மாணவர்களும் கலைநிகழ்வுகளை வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வுகளின் சிறப்பு நிகழ்வுகளாக கோலாட்டம், கும்மி, பறை, ஒயிலாட்டம் போன்ற தமிழர் பாரம்பரிய கிராமியக் கலைகளுடன் தாயக எழுச்சிப்பாடல்களுக்கான எழுச்சி நடனங்களும் இடம்பெற்று பெருந்திரளான பார்வையாளர்களின் மனங்களை நிறைத்து நின்றன.

இந்நிகழ்வின் சிறப்புரைகளை தமிழ்க் கல்விச்சேவையின் நிர்வாகத் தலைவர் திரு. தர்மலிங்கம் தங்கராஜா அவர்களும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப்பொறுப்பாளர் திரு.அறிவு அவர்களும், சொல்லிசைக் கலைஞர் திரு. கதிரவன் அவர்களும் ஆற்றினர். இவர்கள் தத்தமது உரைகளில் பொங்கல் விழாவின் மகிமை பற்றியும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறை புலம்பெயர் தேசங்களில் பற்றிப் பிடித்து நிற்பதை பாராட்டி உற்சாகப்படுத்திய உரையாக அமைந்தது.
அரங்க கலை நிகழ்வுகளை அந்தந்த தமிழ்ப்பள்ளிகளின் பழைய மாணவரே பழக்கி அரங்கியேற்றியிருந்தமையும், அதுமட்டுமன்றி நிகழ்வுத்திட்டமிடல், ஒருங்கிணைப்பு, தொகுப்பு, உணவகம் என அனைத்தும் இளையவர்களே முன்னெடுத்துருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்விச்சேவை சார்பாக ஆசிரியை தனது உரையில் தெளிவான நம்பிக்கை மிக்க இச்செயற்பாட்டுக்கு, பிள்ளைகளுக்கு பல்வேறு சவால்கள் இருந்தன. ஆனாலும், அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு உறுதியோடு உழைத்த இளையோருக்கு பாராட்டுகளை தெருவித்ததோடு எமது இளந்தலைமுறையின் ஆளுமைகளைத் தமிழுக்கும் தமிழருக்குமாக ஒன்று திரட்டி வழிகாட்டியதில் கல்விச்சேவையும் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களும் மனநிறைவும் மகிழ்வும் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

நிகழ்வின் நன்றியுரையை பழையமாணவர்கள் சார்பாக மாணவி ஒருவர் நிகழ்த்தியிருந்தார் அவர் தனது உரையில்… உறுதுணைபுரிந்த பெற்றோர்களுக்கும் பங்குகொண்ட மாணவர்களுக்கும் பாராட்டுகள் தெரித்ததோடு விழாச்சிறப்புற உழைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை கூறி உங்கள் அனைவரது ஒன்றிணைந்த பணிகள் மென்மேலும் உயர்ந்து, தமிழினத்துக்கும் தமிழ்மொழிக்கும் வலுச்சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு விழா இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாறான பாரம்பரிய நிகழ்வுகள் புலம்பெயர்தேசங்களில் எங்கும் நடைபெறுவது எதிர்கால இளைய தலைமுறையினர்கு எமது தொன்மைமிகு வரலாற்று நிகழ்வினை கடத்தும் மிகப் பெரிய பணியாகும் என்பதே நிதர்சனம்..
செய்தியாக்கம்:-
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பையூர்/சுவிற்சர்லாந்து