சுவிட்சர்லாந்தின் ரயில் அமைப்பு அதன் செயல்திறன், நேரத்தை கடைப்பிடிக்கும் தன்மை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளுக்கு உலகப் புகழ்பெற்றது. மில்லியன் கணக்கான பயணிகள் தினசரி பயணம் செய்வதற்கு ரயில்களை நம்பியுள்ளனர்.
இதனால் சுவிட்சர்லாந்தின் ரயில் வலையமைப்பானது ஐரோப்பாவில் மிகவும் சிறப்பானதும் பிரபல்யமானதுமாக காணப்படுகிறது. ஆனால் எந்த அமைப்பையும் போலவே, சுவிஸ் ரயில்வேக்கும் சவால்கள் உள்ளன. சில சமீபத்திய தரவுகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தின் ரயில் போக்குவரத்து பற்றிய பல்வேறு தகவல்களை கொண்டுவருகின்றது இந்தப்பதிவு.
**யாரெல்லாம் ரயில் பயணத்தை நம்பியிருக்கிறார்கள்**
சுவிஸ் ரயில்கள் பலதரப்பட்ட பயணிகளுக்கு சேவை செய்கின்றன, அவற்றுள் பல சுவிஸ் குடியிருப்பாளர்கள் வேலைக்காக நகரங்களுக்கு இடையே பயணிக்க ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் போக்குவரத்து நெரிசல்களை தவிர்த்து, சுமூகமான பயணத்தை அனுபவிக்கின்றனர்.
ரயிலை பயன்படுத்துபவர்களில் மற்றொருமொரு முக்கியமான தரப்பினர் மாணவர்கள். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் பயணிக்கும் மாணவர்களுக்கு மலிவு கட்டணங்கள் இருப்பதால் அவர்களுக்கு ரயிலில் பயணிப்பது இலாபகரமானதும் வசதியான ஒரு போக்குவரத்தாகவும் அமைந்துவிடுகிறது.

அடுத்ததாக சுற்றுலாப் பயணிகள் : சுவிட்சர்லாந்தின் பல ரயில்கள் பனிப்பாறையினூடாகவும் சுரங்கங்களினூடகவும் பயணம் செய்வதால் அவற்றின் ரம்மியமான அழகை ரசிப்பதற்கு என்றே வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மலை உச்சங்களில் ரயில் போக்குவரத்து செய்யும்போது ஆல்ப் மலையின் அழகையும் இயற்கையின் அழகையும் ரசித்தபடி பயணம் செய்வது என்பது சுற்றுலா விரும்பிகளுக்கு வித்தியாசமான அனுபத்தை அளிப்பதாக அமைகிறது.
மேலும் சுவிட்சர்லாந்தின் ரயில் சேவையை எல்லைப்பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற அண்டை நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் எல்லைகள் அமைந்திருப்பதால் குறித்த நாடுகளுக்கு இலகுவாக பயணங்களை மேற்கொள்ள ரயில் சேவை அதிகம் விரும்பப்படுகிறது. இதனால் பயணநேரம் பயணதாமங்கள் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுவதாலும் அதிவேக ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்படுவதாலும் சுவிட்சர்லாந்தின் எல்லை நாடுகளில் இருக்கும் மக்கள் சுவிட்சர்லாந்தின் ரயில்சேவையை அதிகம் விரும்புகின்றனர்.
சுவிஸ் ரயில் பயணங்களை மக்கள் அதிகம் விரும்ப காரணம் அதன் நேரத்தவறாமை குறிப்பிடப்படுகிறது. துல்லியமான நேரத்தில் சரியாக புறப்படும் ஒரு ரயில் சேவையாக சுவிட்சர்லாந்தின் ரயில் சேவை உலகத்தரம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் மின்சாரத்தில் இயங்குதல் ரயிலின் விசாலமான வசதியான இருக்கைகள் மற்றும் மலைபாங்கான பிரதேசங்களை இலகுவில் அணுகும் வசதி போன்ற பல்வேறு காரணிகளால் சுவிஸ் ரயில் பயணம் மிகச்சிறந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
#### **சுவிஸ் ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள்**
சுவிஸ் ரயில்வே பற்றி என்னதான் புகழ்ந்து பேசினாலும் அண்மைக்காலமாக ஒரு சில எதிர்மறையான விடயங்களும் நடைபெற்று வருவதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். கணனிகள் திறமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தாலும் அண்மையில் பல சந்தர்ப்பங்களில் தேசிய சுவிஸ் ரயில்வேயில் பல தொழில்நுட்ப கோளாறுகள் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.
மேலும் உலக அளவில் சுவிஸ் ரயில் டிக்கெட்டுகள் மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் சுவிஸ் (Travel Pass) டிராவல் பாஸ் அல்லது அரை-கட்டண அட்டைகள் போன்ற தள்ளுபடிகள் ஓரளவு நிவாரணம் அளிக்கின்றன. மேலும் பீக் ஹவர்ஸின் (Peak Hours) போது, முக்கிய வழித்தடங்களில் உள்ள ரயில்கள், குறிப்பாக பயணிகளுக்கு, அசௌகரியமாக கூட்டமாக இருக்கும். எனவே நெரிசல் என்பதும் பயணிகளுக்கு ஒரு சவாலான விடயமாகவே இருக்கிறது.
அடுத்து வானிலை தாக்கங்கள்: தீவிர பனிப்புயல் அல்லது நிலச்சரிவுகள் அவ்வப்போது அல்பைன் (Alpine) பகுதிகளில் ரயில் சேவைகளை சீர்குலைக்கும். திடீரென அதிக பனிப்பொழிவு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகள் மூடப்பட்டு ரயில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் ரயில்களின் தாமதாக வருகையால் பயணிகள் புகார்கள் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே சுவிஸ்தேசிய ரயில்வே சந்திக்கின்ற சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் புதிய பல திட்டங்களை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது. வானிலை மாற்றங்கள் அதிகரிக்கும் சனத்தொகை, தொழில்நுட்பகோளாறுகள், பணியாளர் பற்றாக்குறை, மற்றும் செலவீனங்கள் போன்ற சவால்களை சுவிஸ்பெடரல் ரயில்வெ (SBB) எதிர்நோக்கி வருகின்றது.

எனவே இவற்றிக்கு தீர்வு காண சுவிஸ் ஃபெடரல் ரயில்வே (SBB) நீண்ட நடைமேடைகள் மற்றும் நவீன ரயில்கள் உள்ளிட்ட புதிய உள்கட்டமைப்பில் முதலீடு செய்கிறது. SBB, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வழங்குநராக இருப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ரயில்கள் மற்றும் நிலையங்களில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
சமீபத்திய சவால்கள் இருந்தபோதிலும், சுவிட்சர்லாந்தின் ரயில்வே தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான உலகளாவிய அளவுகோலாக உள்ளது. தற்போதைய சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலமும், தொடர்ந்து புதுமைகளைச் செய்வதன் மூலமும், சுவிஸ் ரயில் அமைப்பு எதிர்காலத்தில் பயணிகளுக்கு இன்னும் சிறப்பாக சேவை செய்யத் தயாராக உள்ளது.
இது மாத்திரம் இன்றி அண்மையை கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகளின் படி ஐரோப்பாவிலேயே, சுவிஸ் நாட்டவர்கள்தான் அதிக அளவில் ரயிலில் பயணிக்கிறார்களாம். அது நீண்ட நேரமானாலும் சரி, நீண்ட தூரமானாலும் சரி, ஐரோப்பாவிலேயே, அதிக அளவில் ரயிலை பயன்படுத்துவது சுவிஸ் நாட்டவர்கள்தான்.
2023ஆம் ஆண்டில், சுவிஸ் நாட்டவர் ஒருவர். சராசரியாக 2,466 கிலோமீற்றர் தூரம் ரயிலில் பயணித்துள்ளார். ஒரு ஆண்டில் பயணித்த தூரம் 13.2 சதவிகிதமும், பயணங்களின் எண்ணிக்கை 11.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக பொதுப் போக்குவரத்து சேவை தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலேயே அதிக அளவில் ரயிலில் பயணிக்கும் மக்களைக் கொண்ட இரண்டாவது நாடு ஆஸ்திரியா. உலக அளவில் பார்த்தால், ரயில் பயணங்களில் சுவிஸ் மக்களோடு போட்டிபோடும் நாடு, ஜப்பான் மட்டுமே என்கிறது மற்றொரு ஆய்வு.
சுவிஸ் ரயில்கள் வெறும் போக்குவரத்துச் சாதனம் அல்ல – அவை நாட்டின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். வேலை, படிப்பு அல்லது ஓய்வு என எதுவாக இருந்தாலும், செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் சுவிட்சர்லாந்தின் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளின் மறக்க முடியாத காட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அனுபவத்தை பயணிகள் எதிர்பார்க்கலாம்.
@Theva Mathan