வீரத்திற்கும், விவேகத்திற்கும், அளப்பரிய தியாகங்களுற்கும், கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழுகின்ற மக்களுள் தாய் மண்ணிலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் தோறும் ஈழத் தமிழர்கள் தங்களுக்கான முத்திரையை திடமாகப் பதித்து வருகிறார்கள்.
இவ் வரலாற்றுத் தடத்தில் இளைய தலைமுறையினர் அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற இளையவர்கள் பல்வகையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இயந்திரமயமான வாழ்வியல் முறைகளுக்குள்ளும் கலையோடு கலாச்சாரம் என இணைபாடவிதான செயற்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தி வருவது வியப்பையும் மகிழ்வையும் தருகிறது.
அந்த வகையில் சுவிற்சர்லாந்து நாட்டில் வசிக்கும் திரு. உதயகுமார் சுதர்சன் அவர்கள் சிறுபராயம் முதலே தன் உடற்கட்டமைப்பில் ஆர்வம் கொண்டு ஒரு சிறந்த உடற்கட்டமைப்பாளராக பல்லினத்தவர்களோடும் பல நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்குபற்றி ஈழத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவராக வலம்வரும் இவரைப் பற்றிய பார்வையோடு இந்தவாரம் ஆளுமைகள் நிகழ்ச்சியோடு இணைகிறோம்.
யாழ் உரும்பையுர் துலக் (கிரி) அவர்களின் எழுத்துக்களுக்கு காட்சியமைந்து எமது SwissTamilTv வலையொலி உறவுகளுக்கு விருந்தளிக்கிறது இன்றைய காணொளி..!!!
ஈழத்தின் வடமராட்சி மண்ணின் பருத்தித்துறை இன்பசிட்டி என்னும் ஊரில்
திரு.திருமதி. உதயகுமார் அகிலா தம்பதிகளுக்கு 1987ஆம் ஆண்டு இடைநிலை மகனாய்ப் பிறந்த இவர் 1993ஆம் ஆண்டு தனது ஆறாவது வயதில் பெற்றோரோடு சுவிற்சர்லாந்து வந்தடைந்தார். இங்கு வந்து சிறுபராயக் கல்வியோடு தனது ஏழாவது வயதில் உதைபந்தாட்டத்தின்மீது கொண்ட ஆர்வத்தினால் உதைபந்தாட்ட மைதானத்தில் தன்னையும் ஈடுபடுத்தி சுமார் 20 வருடங்களாக உதைபந்தாட்ட வீரனாக இருந்துவந்துள்ளார். உதைபந்தாட்ட வீரனாக தன்னை வளர்த்துவரும் சமவேளையில் 15 ஆவது வயதில் உடற்பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்தி தன் உடலை பயிற்சியினால் கட்டமைத்துக் கொள்ள விருப்பம் கொண்டார். துரதிஸ்டவசமாக இவரது காலில் மூன்று தடவைகள் செய்துகொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சை காரணமாக தொடர்ந்து உதைபந்தாட்ட அணியில் பயணிக்க முடியாது போனது. விளையாட்டுத் துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஓர்மம் மேலெழவே உடலை கட்டமைக்கும் பயிற்சியைத் தொடர்ந்தார். இதன் பெறுபேறாக சீரமைக்கப்பட்ட உடற்கட்டமைப்போடு மறுபடியும் மேற்கொள்ளவிருந்த சத்திர கிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாத வகையில் காலையும் சீர்செய்து கொண்டார். இவரது மன உறுதியினால் உடல் கட்டமைப்பு பெற்றது. படிப்படியாக பயிற்சி்யைத் தொடர்தார்.
இப்பயிற்சிகளின் போதும், பயிற்சிகளின் பின்னரும் உணவு முறை கட்டுப்பாடுகள் என்பது மிக முக்கியமாக கருதப்படுவதாகவும் குறிப்பாக சாப்பாட்டு முறைகள் உப்புத் தொடக்கம் அனைத்தும் அளவுப் பிரமாணமாக இருப்பதோடு கொழுப்புச சத்துள்ள உணவுகள் முற்றாகத் தவிர்ப்பதாகவும் மிகுந்த கட்டுப்பாட்டோடு இந்தப் பயிற்சியை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுளார்.
நண்பர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இவரது பயிற்சி இத்துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினர்க்கு பயிற்றுவிக்கும் முறையையும் இவர் முன்னிலைப் படுத்தி வந்தார். ஏனையோர்க்கு பயிற்சி அளிப்பதற்கு முன் பயிற்றுவிப்பாளர் அத்துறையில் சாதித்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தைத் தன்னகத்தே வரித்தவராய் 2020ஆம் ஆண்டு போட்டிக்கென தன்னை முழுமையாக தயார்ப்படுத்திய சுதர்சன் பயிற்சி உணவுமுறை அத்தனையையும் தன் வேலை நேரங்களோடு வலுத்த சிரமங்களுக்குமத்தியில் தயார்ப்படுத்தி 2021ஆம் ஆண்டு முதலாவது போட்டியில் சுவிற்சர்லாந்தில் களமிறங்கி அந்த போட்டியில் வெற்றிபெறாது இறுதிப் போட்டியாளராகவே கணிக்கப்பட்டார். இருந்தும் விடாமுயற்சி, தொடர் பயிற்சி, சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் பயிற்சிநெறிமுறை அத்தனையையும் பெற்றுக்கொண்ட சுதர்சன் இத்தனைக்கும் மத்தியில் சுவிற்சர்லாந்தில் வணிகப் பொருளாதாரத்தை கற்றுவந்ததோடு “இளங்கலைமானி” பட்டத்தையும் அதில் பெற்றிருந்தார். அதன் பிரகாரம் நிதித்துறையில் வேலைவாய்ப்புக் கிடைத்ததோடு அந்தத் துறையில் 2024ஆம் ஆண்டு முதல் முதன்மை அதிகாரியாகவும் இவருக்குக் கீழ் ஏனைய நாட்டவர்கள் பணிபுரியும் வகையில் இவரது தொழில்துறை முனைப்புப் பெற்று நிற்கிறது . இத்தனைக்குள்ளும் அடுத்தவருடம் முதுகலைமானி பட்டத்திற்கான கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளார்.
ஆணழகன் போட்டிக்குத் தெரிவாகி ஒரு வருடத்திற்குள் அத்தனை சவால்களுக்கும் முகங்கொடுத்து 2022ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அதே போட்டியில் கலந்து கொண்டு முதல் நிலை வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு பதக்கம் பெற்றார். இவரிடம் எவ்வாறான பிற அழுத்தங்கள் வந்தாலும், நூறுவீத(100%) நாளாந்த பணிச்சுமை அழுத்தினாலும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற பற்றுறுதியே இவரைத் தொடர்ந்தும் அந்தப் பாதையில் பயணிக்கவும் வெற்றிபெறவும் வைக்கிறது.
தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் விமர்சனங்களையெல்லாம் தன் சாதனைகளுக்குப் படிக்கட்டுக்களாக்கி சுவிற்சர்லாந்துப் போட்டியில் வெற்றிவாகை சூடிய ஆணழகன் சுதர்சன் மூன்றாவது வருடமே வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தயாரானார். சாதாரணமாக ஆறு, ஏழு வருடப் பயிற்சிகளின் பின்னரே வெளிநாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் பெரும்பாலான போட்டியாளர்கள் மத்தியில் சுதர்சன் மூன்று வருடங்களிலேயே பங்குபற்றத் தயாரானார்.
உலக அளவில் உடற்கட்டமைப்புப் போட்டிகள் மூன்று தரங்களில் இருக்கிறது. அந்த வகையான போட்டிகளில் சுதர்சன் “உடற்கட்டமைப்பு” தரத்தில் 2023ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் இவரது வயதுப் பிரிவில் முதன்மை வெற்றியைத் தனதாக்கினார். அதன்பின்னரான திறந்தநிலைப் போட்டியில் சர்வதேசதொழில்முறைப் போட்டியாளர்களுடன் தேர்ச்சிபெற வேண்டுமென்றால் அவரது வயதுப் பிரிவு போட்டியில் வெற்றிபெற வேண்டும். இப்போட்டியில் எட்டுத் தொடக்கம் பத்து
(8 – 10) வருடங்கள் வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு அதன் பின்னர் போட்டிகளில் தேர்ச்சிபெற்றவர்கள் பங்குபற்றும் திறந்தநிலைப் போட்டி இது. இருந்தம் தொழுல்முறைப் போட்டியில் இத்தாலி நாட்டில் கலந்துகொண்ட சுதர்சன் நான்காமிடம் பெற்றார். இது அவருக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. ஏனெனில் இப்போட்டிகளைத் தொழிலாகக் கொண்டிருக்கக்கூடிய சக போட்டியாளர்கள் மத்தியில் சுதர்சன் அவர்கள் தான் வாழ்ந்துவரும் சுவிற்சர்லாந்து நாட்டில் பிறிதொரு தொழிலை நூறு வீதமாகக்(100%) கொண்டு சவால் நிறைந்த இந்த உடல் வலுவேற்றல் திறனில் சாதிக்கத் துடித்து இதுவரை எந்தவொரு ஈழத் தமிழனும் சாதிக்காத சாதனையை இத்துறையில் தான் சாதித்ததை எண்ணி பெருமையோடு கூடிய ஆனந்தம் கொள்கிறார்.
இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்ட இவர் தொடர்ந்தும் வெற்றிப் படிகளில் முன்னோக்கிச் சென்று ஈழத்தமிழனாய் வெற்றிவாகை சூடி “என் இனத்தின் கொடியுடன் வெற்றிக் கிண்ணம் பெறுவதே என் ஆசை” என குறிப்பிடும் சுதர்சன் இத்தாலிப் போட்டியின் பின்னர் போர்த்துக்கல்லில் நடந்த தனது வயதுப் பிரிவு அணியுடனான போட்டியில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதலாவது இடத்தை தனதாக்கிக் கொண்டார். பயிற்றுவிப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பல்வகையானோரின் உற்சாகத்தோடு அங்கு நடைபெற்ற தொழில்முறைத் திறந்தநிலைப் போட்டியில் களமிறங்கினார். சவால் நிறைந்த இந்தப் போட்டியில் ஒருபடி மேலே சென்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
இந்த வருடம் (2024) சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றதனால் வெளிநாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்கு கைநழுவிப் போனது. இருந்தும் சுவீடன் போட்டியில் கலந்துகொண்ட சுதர்சன் அங்கும் நான்காம் இடத்தையே பெற்றிருந்தார்.தொடர்ந்து போட்டிகளுக்காக ஸ்பானியா,போலந்த் போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்ட இவர் அங்கும் ஐந்தாவது இடமே கிடைத்தது. இப் போட்டிகளில் பல போட்டியாளர்களின் திறமைகளுக்கு மத்தியில் தான்
நான்காம் ஐந்தாம் இடங்களுக்கு வந்தாலும் இவை அனைத்தையும் ஒருவகையில் பயிற்சிக் களமாகவும் புதிய புதிய அனுபவங்களைக் பெற்றுத்தரும் தளமாகவும் கருதி அடுத்தகட்ட வெற்றிக்கான முனைப்போடு பயணிக்கும் சுதர்சனின் மன உறுதி சாதிக்கத் துடிக்கும் வீர வீராங்கனைகளுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகும்.
சுதர்சன் அவர்கள் அடுத்து ஐரோப்பிய போட்டி ஒன்றிற்காக தன்னை தயார் செய்தார். தொடர் பயிற்சியோடு, விடா முயற்சியோடு போட்டியின் மூன்றாம் இடத்தைப் பெற்றார். இப்போட்டியானது பல நாடுகளில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களை உள்ளடக்கிய பலமான போட்டியாகும். அந்தப் போட்டியில் சுதர்சன் அவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்றதென்பது பெரும் மகிழ்விற்குரியதாய் இருந்தாலும் சுதர்சன் அவர்கள் தான் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ளாமைக்கு தன்னிடம் இருந்த சிறு சிறு தவறுகளே காரணம் என்பதை அந்த அரங்கில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து பணிச்சுமை தன்னை அழுத்தினாலும் இனிவரும் இரண்டு ஆண்டுகளில் அவை அனைத்தையும் பூரணப்படுத்தி 2026ஆம் ஆண்டு நடைபெறும் நாடுதழுவிய ஐரோப்பிய போட்டியில் முதன்மை நிலையை அடைந்து தன் இனத்தின் கொடிதாங்கி வெற்றிவாகை சூடுவேன் என நம்பிக்கை விதைக்கிறார் உதயகுமார் சுதர்சன் அவர்கள்.
இவருடைய எண்ணம் ஈடேற இயற்கையும், தொடர் முயற்சிகளும் வெற்றிவாகை சூட SWISS TAMIL MEDIA சார்பிலும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மீண்டும் Swiss மண்ணின் இன்னுமொரு ஆளுமையோடு சந்திப்போம்… எமது மண் வாசம் மாறாத கலைஞர்களை ஊக்குவிப்போம்… உங்கள் உறவுகளுக்கும் இந்த காணொளியை பகிர்ந்து உதவுங்கள்… ஊக்குவித்தால்… ஊக்கு விற்பவனும் ஒருநாள் தேக்கு விற்பான் என்பது போல.. எமது ஊடக வளர்ச்சியிலும் உங்கள் ஆதரவை நாம் எதிர்பார்த்திருக்கிறோம்… நன்றி.
எழுத்துருவாக்கம் : யாழ் உரும்பையுர் திலக் (கிரி)
குரல் வடிவம் :- துரையப்பா வினோத்கண்ணன்
காணொளி வடிவமைப்பு :- தேவா மதன்