Talents
சுவிஸில் தாயகப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பன்முக ஆளுமையாளர் ஶ்ரீஜன்
சுவிஸில் தாயகப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பன்முக ஆளுமையாளர் ஶ்ரீஜன்
சுவிஸில் தாயகப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பன்முக ஆளுமையாளர் ஶ்ரீஜன் வெளிநாடுகளிலே பிறந்து அந்தந்த நாட்டுக் கலாச்சார முறைகளுக்குள் வாழ்ந்தாலும் தாய்நாட்டின் கலாச்சாரமே முதன்மையெனக் கொண்டு வாழ்ந்துவரும் பல இளையவர்கள் மத்தியில் சைவமும் தமிழும் கண்ணெனக் கருதி ஆலயங்கள்தோறும் தோத்திரப் பாடல்களை அடிபிழை தவறாது பாடும் திறன் பெற்றதோடுமட்டுமல்லாது எழுச்சிப் பாடல்கள், திரையிசைப் பாடல்களை ஒலிப்பதிவு செய்தும் சமூகவலைத்தளங்களிலும் தன் இனிமையான குரலினால் பாடி பல்லாயிரக்கணக்கான இரசிகர்களின் மனங்களில் சிறுவனாச் சிம்மாசனமிட்டு இசைத் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் சுவிற்சர்லாந்தில் பிறந்த செல்வன் சிவதாஸ் ஶ்ரீஜன் அவர்களின் இசைப்பயணம் பற்றி தொடர்ந்தும் அறிந்துகொள்ள அவரது வாழ்வுக்குள் உட்புகுவோம்…
திரு திருமதி சிவதாஸ் சுதர்ஜினி இணையரின் இளைய மகனாக ஶ்ரீஜன் பிறந்தார். இவரது முதனிலை சகோதரி செல்வி ஶ்ரீலா சிவதாஸ் அவர்களும் புலம்பெயர் தேசத்தில் வலம்வரும் ஒரு சிறந்த பாடகியாவார். சிறு பராயத்திலேயே தந்தையை இழந்த பிள்ளைகள் தாயின் அன்பினாலும் தந்தை நிலை அரவணைப்பினாலும் தாயையே இருதுணையாய்க் கருதி பற்றிப் படர்ந்து கலை கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களோடு இசையையும் பண்ணிசையையும் வாழ்வின் பேறாய் வரித்துக்கொண்ட குழந்தைகள் முன்னிலை பெற்று நிமிர்ந்தனர் என்பது தாயின் அதீத விடா முயற்ச்சிக்கு சான்றாகும்.
வெளியநாட்டு வாழ்க்கை என்பது இயந்திரங்களின் இயங்குவிசை போன்றது. அதற்குள்ளும் பிள்ளைகளின் இசைத்துறை மீதான ஆர்வத்தை கண்ணுற்ற தாய் அதற்கான வழிகளை திறக்கலானார்.
சிறுவயதிலேயே ஒரு பாடலை கேட்டவுடன் அதை அப்படியே ஒப்புவிக்கும் திறன் ஶ்ரீஜனிடம் இருந்ததனால் தேவாரங்களை முறையாக போதிக்க பயிற்றுவித்தனர். இதன் பலனாக மூன்றாவது வயதிலேயே ஆலயங்களில் திருமுறைகள் ஓதும் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். இவ்வாறாக சிறுவயது முதலே இசையார்வம் பெருகப் பெருக தெய்வீகப் பாடல்கள், திரையிசைப் பாடல்களை சுயமாகக் கிரகித்து தன்னார்வத்தோடு பாடத் தொடங்கினார்.
இதனைக் கண்ணுற்ற பெற்றோர் இவரது ஆறாவது வயதில் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள “சங்கீத கலைமணி திரு. ஆறுமுகம் ஜெகசோதி” அவர்களிடம் சேர்த்தனர்.
“சிறந்ததொரு குரு அமைந்தால் ஒரு மனிதன் கவலைப்படத் தேவையில்லை” என்ற மூதாளர் வாக்கிற்கமைவாக இசைஞானப் பாலை பணிவன்போடு பருகினார்.
இவர் சங்கீதம் கற்க ஆரம்பிக்கும் முன்பே இவரது தந்தையார் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார். இசையைக் கற்கத் தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே நோயோடு போராடிக்கொண்டிருந்த இவரது தந்தை இறையடியில் நித்திலமானார்.
ஶ்ரீஜனுக்கு அப்போது வயது ஏழு. அறியாத பருவம் பாசப்பிணைப்பால் ஶ்ரீஜனும் துவண்டு போனான். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த ஶ்ரீஜன் “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்று திருநாவுக்கரசர் ஓதுயமைக்கமைவாக இசையுடன் தமிழ்மொழித் தேர்ச்சியும் பெற்றார். தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்தும் பரீட்சைகளில் கலந்து கொண்டு பன்னிரண்டாம் ஆண்டு தமிழ்க் கல்வியையும் நிறைவு செய்தார்.
இவர் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தில் பரீட்சைக்குத் தோற்றி கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டில் ஆசிரியர் தரத்தை நிறைவு செய்தார். இதற்கு இவரின் குருவுடன் இணைந்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது திருமதி ஜெயகௌரி ஜெகசோதி திரு ஜெகசோதி நிரூஜன் அவர்களும் ஆவார்.
இவருக்கு தோல்வாத்தியக் கருவிகள் மீதான ஆர்வமும் மேலோங்கி நிற்க அதன் வெளிப்பாடாக மிருதங்க ஆசான் திரு கார்த்திகேசு விவேகானந்தன் அவர்களிடம் மிருதங்கத்தை முறைப்படி பயின்று இவ்வாண்டு அதற்கான ஆசிரியர் தரத்தையும் நிறைவு செய்யவுள்ளார்.
ஶ்ரீஜன் ஓவியங்கள் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதிலும் “எண்ம ஓவியங்கள்” வரைவதில் அதிக ஈடுபாட்டை காட்டி வருகிறார்.
2018ஆம் ஆண்டில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி சேவை உலகலாவிய ரீதியில் நடாத்திய “தங்கத் தமிழ்க் குரல் தேடல்” திரையிசைப் பாடல் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை வென்றார்.
இவர் இறையைப் புகழும் பண்ணிசையை எவ்வாறு கனம் பண்ணுகிறாறோ அதே போன்று மண்ணுக்காய், மக்களுக்காய் தம் இன்னுயிர் ஈய்ந்தவர்களை புகழும் தாயகப் பாடல்களையும் மதித்து மாண்பேற்றுகின்ற பெருமைக்குரியவராகவும் இருக்கிறார்.
சுவிற்சர்லாந்துநாட்டில் ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற “கானக்குயில்” மற்றும் “எழுச்சிக் குயில்” ஆகிய இரு தேசபக்திப் பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரே ஆண்டில் (2023) இரு விருதுகளை வெல்லும் திறமையை தனதாக்கினார்.
முதன் முதல் இவரது குரல் பதிவேற்றம் பெறும் வாய்ப்பை இசையமைப்பாளர் திரு முகிலரசன் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து இசைப்பிரியன், முகிலரசன், பிரியன் தம்பிராசா, பி.எஸ். விமல், நிர்மலன், குட்டிமோகன் போன்ற தாயக தேசத்து இசையமைப்பாளர்களுடன் இணையும் வாய்ப்பு பெற்றிருப்பதை பெருமிதமாய்க் கொள்ளும் இவர் அகரப்பாவலன், வை. விவேகானந்தன், இன்பம் அருளையா, ஈழப்பிரியன், வேலணையூர் சுரேஸ், மதிபாலா போன்ற சிறந்தபாடலாசிரியரின் அருந்தமிழைப் பாடும் வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறுகின்றார்.
இவருக்கு பாடல்களை இசையமைப்பதிலும் தன்னார்வ மிகுதி மேலிட “ஐயம் நீக்கி” எனும் ஐயப்ப பக்திப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.
இப்பாடகர் சிறு பராயம் முதல் அடியெடுத்துப் பாடவைத்த ஆலயமான “அட்லிஸ்வில்” சிவசுப்ரமணியர் மீது “அட்லிஸ்வில் முருகா வா” எனும் எட்டுப் பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுக்கு இசையமைத்துப் பெருமை சேர்த்தார். இவ் இசைத்தட்டில் அடங்கிய பாடல்களுள் ஒரு பாடலை இவர் எழுதியுள்ளார். இதுவே இவர் முதன் முதலில் எழுதிய பாடல் களமாகும். இதன் சிறப்பம்சம் என்னவெனில் இவரே வரி எழுதி இசையமைத்து பாடலையும் பாடி மூன்றையும் ஒருசேரச் செய்தது முதற் தடவையென பெரு மகிழ்வோடு மனம் திறக்கிறார் பாடகர் ஶ்ரீஜன் அவர்கள்.
இவர் இசையின்பால் கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடாக சமூக வலைத்தளங்களில் பாடல்களைப் பாடி பதிவேற்றி வருகிறார். இவரது பாடல்கள் அதிக எண்ணிக்கையானோர்களின் பார்வையையும் பெற்று பெருந்தொகையான கருத்தூட்டங்களையும் பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் இவர்கள் இருவரும் தனக்கான இரு விழியைப் போன்றவர்கள் என இசை மீதான மேலாண்மையை வெளிப்படுத்தும் விதம் இசை மீது கொண்டிருக்கக் கூடிய ஆழ்மனப் பற்றுறுதியை தொட்டு நிற்கிறது.
தமிழர்களுடைய பாரம்பரிய பண்ணிசையையும் அருந்தமிழ்ச் சொத்துக்களான பன்னிரு திருமுறைகளையும் எமது இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் இவ்வாண்டின் மே மாதத்தில் ஒரு புது முயற்சியை ஆரம்பித்திருக்கிறார். அதை நோக்குமிடத்து தேவாரம், திருவாசகம், திருமுருகாற்றுப்படை போன்ற பன்னிரு திருமுறைகளில் அடங்கும் பாடல்களையும் திருப்புகழ், அபிராமி அந்தாதி, கந்தலரங்காரம் போன்ற சமயநெறிப் பாடல்களையும் பாடி அதனை தமிழிலும் ஆங்கிலத்திலும் வரிகளாக்கி அதன் தமிழ்ப் பொருளுரையையும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களையும் இணைத்து காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதே இப்பெரு முயற்சியாகும்.
இதன் வழி இளைய தலைமுறையினர்க்கும் எமது தொன்மையான நூல்களைப் பற்றிய அறிதலும் விழிப்போடு கூடிய பற்றுதலும் பெருகும் என நம்புகிறார். இவரது தாயார் பிறந்த ஊர் திருகோணமலை என்பதனால் என்னவோ திருமலை மண்மீதும் அங்கு கோணாட்சி புரியும் திருக்கோணேச்சரர் மீதும் தனக்கு சிறு வயதிலிருந்தே பக்தியைத் தாண்டிய ஒரு காதல் தன் ஆழ்மனதில் குடிகொண்டிருப்பதாகவும் ஆதலால் அவர் மேற்கொண்ட இவ்வாறான கானலை ஊடான மொழிபெயர்ப்பு முயற்சிக்கு “கோணேச்சரர் திருமுறை இசை” என பெயர் சூட்டி தன் தாய்நிலத்தை பெருமைப்படுத்தி நிற்கிறார்.
இவரது இப்படைப்புகள் வெளிவரும் தளங்களாக முகநூல், வலையொலி, படவரி, ரிக்ரொக் போன்ற சமூகவலைத்தளங்களில் “Shrijan Sivathas”, “கோணேச்சரர் திருமுறை இசை”, “thirumurai isai“ எனும் பெயரில் பதிவேற்றி வருகிறார். தாயகம், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொறசியஸ் போன்ற நாடுகளிலிருந்து இந்த முயற்சிக்கு பெரு வரவேற்பு கிடைத்து வருவதாகவும் இது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் தான் தமிழ்மகன் என்ற முறையில் அதன் நெறிமுறைகளை முறையாக செய்கின்றேன் என்ற உறுதியான உணர்வையும் தன்னுள் வீச்சாக விதைத்து நிற்பதை உணரும் இவர் நாள்தோறும் உயர்வுநிலை கண்டுவரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அந்த தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் உபயோகிக்க வேண்டும் என்ற இந்த இளரத்தத்தின் துடிப்பை கண்ணுற்றுப் பெருமைகொள்ளும் இத்தருணம் மிகவும் நெகிழ்ச்சி தருகிறது.
“திருமுறைகள் எம் சொத்து, நாயன்மார்கள் சென்ற பாதையே எமக்கான பாதை என உலகிற்கும் குறிப்பாக இளையவர்களுக்கும் எடுத்துரைப்பதே என்னுடைய நோக்கம்”
என திடம் கொள்ளும் ஶ்ரீஜனை எதிர்காலத்தில் ஆன்மீக அனுட்டனங்களை உயர்வடையச்செய்யும் துடிப்புள்ள இளைஞனாக பார்க்கிறோம் . ஐம்பெரும் காப்பியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களையும் பாடி மொழிபெயர்த்து உலகறியச் செய்யவேண்டும் என்பதே இவரது மிகப்பெரும் ஆசைகளில் ஒன்றாகும். இறை அருளால் மிகவிரைவில் நடந்தேறுமென அசையாத உறுதியோடு நம்புகிறார். தற்போது சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுவரும் மாணவனான இவர் குறிப்பிடுகையில்…
“ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நோக்கத்துடன்தான் பிறப்பிக்கப்படுகிறான் அப்படி இறைவன் என்னை படைத்தது தமிழிசை பாடுவதற்கே என்று நினைக்கிறேன். அருணகிரிநாதர் கூறுயது போல எத்தனை பிறவி எடுத்தாலும் “பாடும் பணியே பணியாய் அருள்வாய்” என்று இறைவனிடம் வேண்டுபவன் நான். இல்லையென்றால் எவ்வித இசைத் தொடர்பும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு எவ்வாறு இப்படிப் பாடுப்பேறை தந்திருப்பான்” இவ்வாறாக தனக்கு கிடைத்த ஆண்டவன் கருணையை மெச்சி பக்திப் பரவச உணர்வு கொள்கிறான் ஶ்ரீஜன்.
இவர் பெற்ற விருதுகள், வெற்றிகள், பட்டங்கள் யாவற்றிற்கும் உரிமம் உடையவர்கள் பெற்றோர்களும் இவரது ஆசான்களும் என்பதோடு தன்னுடைய பங்கு இதில் மிகச் சிறியதாகவும் தனது தாயாரும், குருவும், மகான்களும் என்பதோடு இவர்களை தனது வாழ்க்கையில் பெற்றது சென்ற பிறப்பில் தான் செய்த புண்ணியம் என நெஞ்சம் நெகிழ்கிறார்.
வெளிநாட்டு கல்விமுறை தொழில்க்கல்விமுறை இதர ஆர்வம்மிக்க துறைகள் அத்தனைக்கும் முகம் கொடுத்த ஒரு இளைஞனாக இத்தனை சுமைகளுக்குள்ளும் சதா தமிழ்வாழ அதன் பண்பாட்டு நெறிமுறைகள் ஓங்க ஆலயங்கள் தோறும், சமூக வலைத்தளங்கள் தோறும் தமிழையும் அதன் பெருமைகளையும் பேணிப் பாதுகாத்து தன் வயதையுடையவர்களிடம் கடத்தத்துடிக்கும் இந்த இளைஞன் அபூர்வமான தேடல்களில் ஒருவராவார்.
கையடக்கத்திற்குள்ளே கொட்டிக்கிடக்கும் சமூகவலைத்தளங்களூடாக உலகப் பரப்பெங்கும் மூலை முடுக்குகள் தோறும் மூழ்கி வாழும் இளைய தலைமுறை பகிரத்துடிப்பதென்னவோ பெரிதும் பலராலும் விரும்பப்படாத பதிவுகள்.
இவ் நவீன வசதிகளை தேவையற்ற பதிவுகளால் நிறைத்து நிற்கும் இளையவர்கள் இம்முன்னோடி இளைஞர் போன்ற முயற்சிகளை முன்னெடுத்தால் தமிழும் அதன் பண்பாட்டு நெறிமுறைகளும் அழியாது வாழும். அந்தவகையில் இவருக்குள் இருக்கும் ஆற்றலையும் அதுசார்ந்த படைப்புகளையும் இந்த சமூகப் பெருவெளி பெரிதும் வரவேற்று பயன்பெற வேண்டுமென வேண்டுவதோடு ஶ்ரீஜனின் துடிப்பான இந்த முயற்சிக்கு எம்மால் இயன்றவரை நாமும் கரம்கொடுத்து உதவுவோமாக.
நன்றி :- யாழ்/உரும்பையூர் து.திலக்(கிரி) அவர்கள் சுவிற்சர்லாந்திலிருந்து 29.09.2024 அன்று வீரகேசரிக்குஎழுதிய கட்டுரை