சுவிஸில் வாகைத்தமிழ் வானொலி நடாத்திய ‘தேச விடுதலைப் பாடற்போட்டி 2024’
சுவிஸில் வாகைத்தமிழ் வானொலி நடாத்திய 'தேச விடுதலைப் பாடற்போட்டி 2024'
சுவிஸில் வாகைத்தமிழ் வானொலி நடாத்திய ‘தேச விடுதலைப் பாடற்போட்டி 2024’ யேர்மனியை தலமையகமாக கொண்டு இயங்கும் வாகைத்தமிழ் இணைய வானொலியின் சுவிட்சர்லாந்தில் ‘வாகைக்குயில் தேச விடுதலைப் பாடற்போட்டியும் சஞ்சிகை அறிமுகமும்’ சுவிட்சர்லாந்தில் மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.
தனக்கான பெருமையுடன் 24 மணிநேரமும் ஒலிக்கும் வாகைத்தமிழ் வானொலியின் நான்காவது ஆண்டில் கால்பதிக்கும் தருணத்தை முன்னிட்டு குறித்த தேச விடுதலைப் பாடற் போட்டி நிகழ்ச்சியானது கடந்த 14ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
முதல் முறையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளான சுவிஸ்,பிரித்தானியா,யேர்மனி,பிரான்ஸ்,பெல்ஜியம்,டென்மார்க் என ஆறு நாடுகளில் இருந்து 55க்கும் அதிகமான போட்டியாளர்களோடு 250க்கும் அதிகமான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்து தொடர்ந்து அகவணக்கமும் வாகைப்பண்ணும் இடம்பெற்ற வேளை பொதுமக்கள் எழுந்து நின்று அகம்வணங்கி வரவேற்பு வழங்கியிருந்தனர்.
அதனைதொடர்ந்து வரவேற்பு நடனத்தினை நாட்டியத்தாரகை நாட்டியத்தென்றல் விருது பெற்ற வாணிசர்மா அவர்களின் மாணவி நவீனா முத்துத்தம்பி அவர்கள் வழங்கியிருந்தார்.
அதனை தொடர்ந்து வரவேற்புரை சிறப்பு பாடல் என தொடர்ந்து பாடல் போட்டிகள் ஆரம்பமாயிருந்தன. இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு ஏழுபோட்டியாளர்கள் தெரிவாகி போட்டியிட்டனர். அதில் வாகைக்குயில்2024 எனும் விருதை செல்வி அனுஷ்கா கங்காதரன் அவர்கள் தட்டிச்சென்றிருந்தார்.
வாகைக்குயில் தெரிவுக்குழாமாக தாயகத்தின் மூத்த இசையாளர் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களின் அன்புப் புதல்வர் சாய்தர்சன் மற்றும் ஈழத்தின் மூத்தபாடகர் வாகைத்தமிழ் வானொலியின் போர்முழக்கம் விருதாளர் சுகுமார் அவர்களின் அன்புமகன் முகிலரசன் மற்றும் சுவிட்சர்லாந்தின் எழுச்சிக்குயில் இசைக்குயில் விருது பெற்ற ரம்யா சிவானந்தராஜா அவர்களும் நடுவர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
இது மாத்திரமின்றி வாகைத்தமிழ் வானொலியின் ஓராண்டுச் சஞ்சிகையை தமிழீழதேசத்தின் மூத்த இலக்கியவாதியும் பாடலாசிரியருமான திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் அறிமுகம் செய்ய சிறப்புப் பிரதிகளை ஐரோப்பிய நாடுகள் தழுவிய கலைஞர்கள் பெற்றிருந்தார்கள்.
இந்நிகழ்வை பிரான்ஸ் நாட்டின் அறிவிப்பாளரும் ஊடகவியளாளருமான நகேசுவரன் குருபரன் திறம்பட தொகுத்து வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிறைவாக இந் நிகழ்வு சிறக்க உழைத்த அனுசரணையாளர்கள் மற்றும் கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் நன்றி கூரலோடு நிகழ்வு நிறைவானது.