Swiss headline News

வெளிச்சத்துக்கு வந்த ‘துவாரகா’ விடயம் : அம்பலமான உண்மைகள்.!!

வெளிச்சத்துக்கு வந்த 'துவாரகா' விடயம் : அம்பலமான உண்மைகள்.!!

வெளிச்சத்துக்கு வந்த ‘துவாரகா’ விடயம் : அம்பலமான உண்மைகள்.!! இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் உள்நாட்டுப் போர் கடந்த 2009 ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. இறுதிப்போரில் பிரபாகரன் போரில் வீரச்சாவை தழுவியதாக அவருடைய உடல் நந்திக்கடல் அருகே கண்டுபிடிக்கப்பட்டு, முன்னாள் போராளிகளால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் இலங்கை அரசாங்கம் பிரபாகரன் உட்பட ஒட்டுமொத்த விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக அறிவித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. பிரபாகரனின் மரணம் அவரது சடலம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழர்கள் சிலர் தங்கள் தலைவரும் அவரது குடும்பத்தினரும் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறார்கள்.

போலி துவாரகா

இந்த நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் சிலர் தலைவரின் மகள் போல் நடித்து பணம் வசூலிப்பதாக அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த சர்ச்சை கடந்த வருடம் கார்த்திகை 27 மாவீரர் தினத்திற்கு பிறகு இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது.

காரணம் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதி அன்று சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என கூறப்பட்டு வந்த, தலைவரின் மகள் என சொல்லிக்கொண்டிருந்த “துவாரகா” என்கின்ற ஒரு பெண், ஒரு ஊடகத்தில் தோன்றி மாவீரர் உரை நிகழ்த்தியிருந்தார். இதன் பின்னர் ஒரு பேசுபொருளாக வாத பிரதிவாதங்களுடன் ஊடகங்களும் இதனை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

போலி துவாரகா

எனினும் எது உண்மை எது பொய் என்ற மர்மம் நீடித்தவண்ணமே இருந்தது. அன்றைய தினமே இது ஒரு போலி என எமது சுவிஸ் தமிழ் ஊடகம் சுட்டிக்காட்டி காணொளி வெளியிட்டிருந்தது. அதே போன்று யேர்மனியில் இருக்கின்ற நேசக்கரம் மீடியோவும் இது ஒரு பணமோசடிக்கும்பலின் நன்கு திட்டமிட்ட செயற்பாடுகள் என பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக பேசி வந்தது.

எம்மால் வெளியிடப்பட்ட காணொளியை முடக்கிய போலி துவாரகா கும்பல் வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடரப்போவதாகவும் தொலைபேசி மூலம் எம்மை தொடர்பு கொண்டிருந்தனர். எனினும் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் வரை நாமும் அந்த காணொளியை மீண்டும் வெளியிடுவதை நிறுத்தியிருந்தோம்.

இறந்த தமிழ் புலிகளின் தலைவரைச் சுற்றிய நன்கொடை ஊழல் செய்தி எஸ் ஆர் எஃப் 7

ஆனால் இன்று சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்றில் அவர் போலி துவாரகா என்பதை அவரிடம் பல லட்சம் பிராங்குகளை கொடுத்து ஏமாந்த தமிழர்களே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். சிலர் அந்த துவாரகா எனப்படும் பெண் மீது வழக்குத்தொடரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

சொந்த நாடு வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் நம்பிக்கையோடு விளையாடும் ஒரு விளையாட்டாகவே இது பார்க்கப்படுகிறது. SRF ஊடகத்தின் செய்தியின் அடிப்படையில் அதில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்களை எமது உறவுகளுக்காக நாம் தருகிறோம்.

போலி துவாரகா

SRF ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த தமிழர் ஒருவர், துவாரகா என்ற போர்வையில் தன்னை தொலைபேசி மூலமாக அணுகிய பெண் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தன்னை நம்பவைத்ததாக குறிப்பிடுகிறார். இதனடிப்படையில் சுமார் 380,000 பிராங்குகளை தான் அவருக்கு வழங்கியதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் இதற்காக தனது நண்பர்களிடமும் பணம் சேகரித்ததாக குறிப்பிடுகிறார்.

மேலும் துர்காவ் கன்டோனை சேர்ந்த “சகாயதாசன் தேவருள்” என்பவர் கருத்து தெரிவிக்கையில், அவள் ஒரு மிகப்பெரிய மாபியா கும்பல் என தெரிவிக்கிறார். குறித்த பெண் தனியாக செயற்படவில்லை எனவும் அவருக்கு பின்புலத்தில் மாபியா கும்பல் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.  துவாரகா எனப்படும் குறித்த பெண் தான் ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையை வளர்ப்பதாகவும், அவருக்கு சிகிச்சைக்கு பணம் வேண்டும் என கேட்டதாகவும் சகாயதாசன் தேவருள் குறிப்பிடுகிறார்.

எனவே தான் 50,000 பிராங்குகளை அவரிடம் கொடுத்து தற்போது ஏமாற்றுப்பட்டதை உணர்வதாக தெரிவிக்கிறார். இதனால் தான் தற்போது வீடு வீடாக சென்று அதிகாலையில் பத்திரிகை போட்டு வருவதோடு இரண்டு வேலைகளை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

தேவஅருள் மற்றும் இன்னும் பலர் 2023ம் நவம்பர் மாதம் வெளியான துவாரகா மாவீரர் உரை காணொளிக்கு பின்னர் இன்னும் பல பணமோசடிகள் இடம்பெற்றதாக குறிப்பிடுகின்றனர்.

இது மாத்திரமின்றி ராஜன்காந்த் அந்தோணிப்பிள்ளை என்கின்ற முன்னாள் போராளி ஒருவரை குறித்த ஊடகம் வினாவிய போது பிரபாகரன் எனக்கு கடவுள். அவருக்கு நான் தினமும் அஞ்சலி செலுத்துகிறேன். மெழுகுதிரி ஏற்றி வழிபடுகிறேன். அவர் உயிருடன் இல்லை எனவும், அவரின் பெயரை சொல்லி பணம் வசூல் செய்வதை ஒருபோதும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கிறார்.

போலி துவாரகா

தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் செயற்பட்ட குலம் அவர்களும் குறித்த ஊடகத்திடம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் குறிப்பிடுகையில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக இருந்தால் அதைச்சொல்பவரிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் இந்த விடயத்தை எப்படி நம்பமுடியும். அதனால் என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

ஒரு பெண்ணால் இவ்வாறு எப்படி இவ்வளவு பெயரி பண மோசடியை மேற்கொள்ள முடியும்..? அப்படியாயின் அவருக்கு பின்புலத்தில் இருப்பது யார்.? மாவீரர் தின உரையை வெளியிட்டது யார் என்பது தொடர்பாகவும் குறித்த ஊடகம் ஆராய்ந்து அது தொடர்பாகும் பல்வேறு தரப்பினருடைய கருத்துக்களை வெளியிட்டிருந்தது.

குறிப்பாக துவாரகா எனப்படும் அந்தப்பெண்ணை நேரில் சந்திக்கசென்ற ஊடகத்திடம் அவர் தன்னை வெளிக்காட்ட விரும்பவில்லை என மறுத்துள்ளார். எனினும் ஊடகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மாவீரர் உரை நிகழ்த்திய பெண் நான் இல்லை எனவும் மறுத்துள்ளார்.

போலி துவாரகா

அது மாத்திரமின்றி எவரிடமும் நான் பணம் வசூலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஊடகம் நேரில் சந்தித்த பெண்ணுடைய முகத்தினையும் மாவீரர் உரை நிகழ்த்திய பெண்ணின் முகத்தினையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறித்த ஊடகம் சோதனை செய்து பார்த்ததில் இரண்டு முகங்களும் ஒருவர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைதொடர்ந்து இவரின் பின்புலத்தில் இருப்பவர்கள் என நம்பப்படும்இ மாவீரர் உரை பதிவேற்றம் செய்யப்பட்ட இணையத்ளத்தில் இருக்கும் விலாசத்தின் சொந்தக்காரரான புலிகளின் முன்னாள் சுவிஸ் நிதித் பொறுப்பாளராக கடைமையாற்றிய அப்துல்லா என்று அழை;க்கப்படும் ஜெயபாலன் செல்லையாவிடம் இது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

போலி துவாரகா

இதற்கு அவர் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக அவர் கூறுகிறார். தான் யாரிடமும் தவறாக பணம் வசூலிக்கவில்லை எனவும் அவருக்கு பணம் தேவையில்லைஇ அரசியல் ஆதரவுதான் தேவை எனவும் குறிப்பிடுகிறார். இலங்கையில் தமிழர்கள் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள். 14 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை எனவே எமக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிடுகிறார்.

எனினும் அப்துல்லா ஒரு தமிழரை பணம் வசூலிக்க வற்புறுத்த முயற்சிக்கும் ஆடியோ ஒன்றும் ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதில் ‘நமக்கு சொந்த நாடு வேண்டும் என்றால்இ அதற்கு தேவையான பணம் தேவை.’ என அப்துல்லா தொலைபேசியில் ஒருவருடன் பேசுவது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துவாரகா மற்றும் பிரபாகரன் விடயம் தொடர்பாக சேரமான் அவர்களிடம் குறித்த ஊடகம் கேள்வியெழுப்பியபோது நாங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புகிறோம் என குறிப்பிடுகிறார்.

செய்தி மூலம் மற்றும் புகைப்படங்கள் (c) Srf.ch

 

Related Articles

Back to top button