luzernSwiss Local News
லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் பெண்
லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் பெண்.
சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னணி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் அவர்களை சிறப்பித்துள்ளது.
நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தனிமனிதர்களாக நிகழ்த்திய வாழ்க்கைப் போராட்டம் என்பது, இறுதி யுத்தத்திற்கு ஒப்பானது அல்லது அதனையும் விட மேலானது என்றே சொல்ல வேண்டும்.
இன்று நம் புலம் பெயர் சமூகமானது ஒரு சில தேசங்களின் வளங்களையும் விட அதிகமான பொருளாதார நிறைவு கொண்ட சமூகமாக வளர்ந்து வருகிறது.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புலம்பெயர் மக்களின் கல்வி,பொருளாதாரம் என்பன சில தேசங்களின் மொத்தச் சொத்தையும் விட அதிகமாக இருக்கும் என்பதற்கு ஆதாரம் அவசியமில்லை. டாலர்களாக, பவுண்களாக, யூரோக்களாக, பிராங்குகளாக இவர்களின் வருமானம் 20 ஆண்டுகளில் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளது.
புலபெயர் தமிழர்களின் பொருளாதார முன்னேற்றம் இப்படியென்றால் கல்வி, தலைமைத்துவ முன்னேற்றங்களும் அதற்கு ஈடாக மிக உச்சங்களைத் தொடுகின்றன. அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுபா உமாதேவன்.
அத்துடன் , ஐந்து மொழிகளில் சரளமாக உரையாற்றும் இவர் , பல மில்லியன் பணத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். அதுமட்டுமல்லாது சுபா உமாதேவன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து சில நாடுகள் மற்றும் போராட்ட இயக்கங்களுடனான பேச்சுவார்த்தையில் இராஜதந்திரியாகக் கலந்து கொள்கிறார்.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் எமது சமூகத்திலிருந்து தோன்றிய சுபா உமாதேவன் தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஏனைய ஆலோசகர்கள் Coop , Css போன்ற மிகப் பெரும் நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரி என்றால், சுபா உமாதேவனின் உயரம் என்னவென்று சொல்லத் தேவையில்லை.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ‘தினத்தந்தி’ பத்திரிகை தனது ஞாயிற்றுக்கிழமை இணைப்பிதழான ‘தேவதை’யின் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவனின் உயரங்களைப் பேசியதானது,புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்திலும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.
இந்நிலையில் புலம் பெயர் தமிழர்களை பெருமைப்படவைத்த சுபா உமாதேவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். இவர் பல சிகரங்களை தொட நாமும் வாழ்த்துவோம்.
@Suba Umathevan